தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கான்கிரீட் கல் மீது காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதல்
ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கான்கிரீட் கல் மீது காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதனால் ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கான்கிரீட் கல் மீது காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதனால் ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து சென்னைக்கு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு இன்று அதிகாலை 2.50 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை வந்தடைந்தது.
ஓரிரு நிமிடம் அங்கு நின்ற அந்த ரெயில் பின்னர் காட்பாடியை நோக்கி புறப்பட்டது.
ஆம்பூரை கடந்து பச்சகுப்பம் ரெயில் நிலையம் அருகே வீரக்கோவில் என்ற பகுதியில் சுமார் 3.15 மணியளவில் அந்த ரெயில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்தது.
கல் மீது மோதியது
இதனை டிரைவர் கவனித்து விட்டார். எனினும் ரெயிலை நிறுத்தமுடியவில்லை. இதனால், அந்த கல் மீது ரெயில் மோதியதும் பயங்கர சத்தம் கேட்டது.
உடனே ரெயிலை இயக்கக்கூடிய லோகோ பைலட், துணை பைலட் (ரெயில் என்ஜின் டிரைவர்கள்) அருகில் இருந்த பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தி சக்கரங்களை பார்வையிட்டனர்.
அதில், கான்கிரீட் கல் மீது ரெயில் மோதியதால் ரெயிலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரிந்தது.
இது குறித்து அவர்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
சுமார் 15 நிமிடம் ரெயில் அங்கேயே நின்றது. ரெயிலுக்கு எந்த பாதிப்பும் இல்லாததால் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றதும் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு காட்பாடியை அடைந்து அதன்பின் சென்னையை சென்றடைந்தது.
இதனிடையே தண்டவாளத்தில் கான்கிரீட்கல் மீது ரெயில் மோதிய இடத்திற்கு ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மோப்பநாய் பிரிவினர்
சென்னை ரெயில்வே பாதுகாப்பு படை தனி பிரிவினரும் மோப்பநாய் ஜான்சியுடன் வந்தனர்.
மோப்பநாயை பயிற்சியாளர் ராபின் மோப்பம்பிடிக்க செய்தார். இதனையடுத்து மோப்பம் பிடித்தவாறு சென்ற ஜான்சி, தேசிய நெடுஞ்சாலையை கடந்து அங்குள்ள கோவில் அருகே சென்று நின்றது.
அந்த பகுதிக்கு சேலம் உட்கோட்ட ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் சென்றனர்.
ரெயிலை கவிழ்க்க சதியா?
அவர்கள் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி செய்து தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டதா? கல் வைத்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக கன்னிகாபுரம், புதிய கோவிந்தாபுரம், பெரிய கோமஸ்வரன், சின்ன கோமஸ்வரன், பச்சகுப்பம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள கடைகள், வீடுகளில் பொது மக்களிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்காணிப்புக்கு உத்தரவு
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மேலும் ரெயில் பாதையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.