விண்ணை தொடும் பூக்கள் விலை- இல்லத்தரசி, வியாபாரிகள் கருத்து


விண்ணை தொடும் பூக்கள் விலை- இல்லத்தரசி, வியாபாரிகள் கருத்து

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பூந்தோட்டங்கள் நிறைந்த பகுதியாக சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் உள்ளன. மல்லி, சாமந்தி, மேரிகோல்டு, கோழி கொண்டை பூ, முல்லை என்று பல வகை பூக்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. சத்தியமங்கலம், டி.என்.பாளையம், பவானிசாகர் வட்டார அளவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பூ வகைகள் வளர்ப்பு மட்டுமே முக்கிய விவசாய தொழிலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூ சந்தைகளிலேயே மிகப்பெரிய சந்தையாக சத்தியமங்கலம் உள்ளது. இங்கிருந்துதான் வியாபாரிகள் பூக்களை வாங்கி, ஈரோடு மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

கோடை காலம் என்பது பூக்கள் அதிக அளவில் பூக்கும் காலம். எனவே இந்த நேரத்தில் பூ சந்தைகளில் பூக்கள் குவியும். வியாபாரிகள் போட்டிப்போட்டு விலைக்கு வாங்குவார்கள். சத்தியமங்கலத்தில் சந்தையில் இருந்து வாங்கப்படும் பூக்கள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், பல ஆயிரம் கிலோ அளவுக்கு பூக்கள் கிடைத்தாலும் வாங்கி வைத்துக்கொள்ள வியாபாரிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், பனிப்பொழிவு, மழை அதிகம் உள்ள காலங்களில் பூக்கள் அதிகம் விரியாது. குறிப்பாக நவம்பர் மாதம் தொடங்கி, ஜனவரி மாதம் வரை பூக்கள் மிகக்குறைந்த அளவிலேயே பூக்கும். இதனால் சந்தைக்கு வரத்து குறைந்து விடும். இதனால் பூ விலை விண்ணைத்தாண்டும். விலை உயர்ந்தால் உள்ளூர் வியாபாரிகள் பூ வாங்கும் போட்டியில் இருந்து சற்று பின்தங்கி விடுவார்கள். இதனால் வெளி மாநில மற்றும் வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கி, பதப்படுத்தி அனுப்புகிறார்கள்.

இதனால் உள்ளூர் வியாபாரிகளும், இந்த பூக்களை நம்பி இருக்கும் பொதுமக்களும் ஏமாற்றம் அடைகிறார்கள். திருமணம், கோவில் விஷேசங்களுக்கு போதிய அளவுக்கு மகிழ்ச்சியாக வைக்க முடியாத நிலையும் உள்ளது. பெண்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தலைநிறைய மல்லிகைப்பூ வைத்து தளைய தளைய சேலை கட்டிச்செல்வது நம் தமிழ் பெண்களுக்கு பிடித்தமான விஷயம். ஆனால், சமீப காலமாக தாராளமாக பூக்கள் வைக்கும் அளவுக்கு மனம் இருந்தாலும், பூக்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இதனால் ஆசையை கட்டுப்படுத்தி, சிக்கனமாக இருக்க வேண்டிய சூழலில் பெண்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபற்றி இல்லத்தரசி, வியாபாரிகள் கூறிய கருத்து வருமாறு:-

வருத்தமாக இருக்கிறது

ஈரோடு ராக் மவுண்ட் சிட்டியை சேர்ந்த இ.ஜெரோமி பென்னி

இது திருமணங்கள், கோவில் திருவிழாக்கள் அதிகம் நடக்கும் காலகட்டம். சுபமுகூர்த்த தினங்களில் விசேஷங்களுக்கு செல்லும்போது அதில் கலந்து கொள்பவர்களும் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று பூக்கள் சூடிக்கொள்வதும், சுபகாரியங்கள் நடத்துபவர்களுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்பதுவும் வழக்கம். திருமணம் போன்ற சுப பேச்சுவார்த்தைகளின்போது சம்மதம் தெரிவிக்கவும் பூ வைப்பது நமது பாரம்பரிய பழக்கம். எனவே நமது கலாசாரத்திலும், பண்பாட்டிலும் கலந்து இருப்பது பூ. அதிலும் மல்லிகை, முல்லை, ரோஜா பூக்கள் பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவை. அன்பு பகிர்தலுக்கும் இந்த பூக்கள் அடையாளமாக உள்ளன. ஆனால், விசேஷங்கள் அதிகம் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் பூக்களில் விலை உயர்வு என்பது மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. மல்லிகைப்பூ ஒரு முழம் ரூ.80, முல்லைப்பூ ஒரு முழம் ரூ.100, ஜாதிமல்லி முழம் ரூ.50 என்ற விலைக்கு விற்கிறது. இந்த விலை சாதாரண நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாது. அதே நேரம் பூக்கள் இவ்வளவு விலை அதிகமாக விற்பனையாகும் காலத்திலாவது, விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்குமா என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விவசாயத்துறை அதிகாரிகள், அரசு நிர்வாகம் கவனிக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் பணத்தில் உரிய பங்கு விவசாயிகளுக்கும் சேர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பனிக்காலத்தில்...

சத்தியமங்கலம் அருகே தாண்டாம்பாளையத்தை சேர்ந்த பூ விவசாயி திருமலை கூறியதாவது:-

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் பூ விவசாயத்தை நம்பி சுமார் 2 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் பூக்களின் விளைச்சலில்தான் இருக்கிறது. நான் 4 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை செடிகள் நட்டு வளர்த்து வருகிறேன். இந்தசெடிகளில் இருந்து தற்போது தினசரி சுமார் 5 கிலோ அளவுக்கு மல்லிகை பூக்கள் கிடைக்கிறது. இதுவே வெயில் காலமாக இருந்தால் சுமார் 25 கிலோ அளவுக்கு மல்லிகை பூக்கள் கிடைக்கும். அதிக அளவில் பூக்கள் மலரும்போது, பூ பறிக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். தற்போது மிகக்குறைந்த அளவில் பூ கிடைக்கும்போது தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்காது. வெயில் காலத்தில் நன்றாக வளரும் செடிகள், பனிக்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே அடிக்கடி மருந்து தெளிக்க வேண்டியது இருக்கும். இது அதிக செலவை ஏற்படுத்தும். ஆனால் செலவுக்கு ஏற்ற வருவாய் கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிச்சயமற்ற நிலை

பூ வியாபாரி முருகேஷ் கூறியதாவது:-

சத்தியமங்கலம் சந்தையில் இருந்து அனைத்து வகை பூக்களையும் ஏலத்தில் எடுத்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பூ சந்தைகளுக்கு அனுப்பி வைக்கிறேன். மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் வெயிலாக இருக்கும். அப்போது குறைந்த பட்சம் 500 கிலோ அளவுக்கு பூக்களை ஏலம் எடுப்பேன். ஆனால் தற்போது பூக்கள் வரத்து மிக மிக குறைவாக உள்ளது. மல்லிகைப்பூக்கள் ஒரு கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் வரை விலை வைக்க வேண்டியது இருக்கும். ஆனால் பிற வியாபாரிகளிடம் இருந்து எங்களுக்கு வரும் ஆர்டர்களின் தேவைக்கு ஏற்ப ஏலத்தில் பூக்களை வாங்கி கொடுக்கிறோம். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் நாளுக்கு நாள் வரத்து குறைகிறது. எனவே விலையில் நிச்சயமற்ற நிலை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலை இழப்பு

சத்தியமங்கலம் பூ சந்தையில் இருந்து வெளிநாடுகளுக்கு பூக்களை ஏற்றுமதி செய்யும் சேதுமாதவன் கூறியதாவது:-

சத்தியமங்கலம் பூக்கள் அமெரிக்கா, துபாய், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு எங்கள் ஏற்றுமதி நிறுவனம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு வாங்கும் பூக்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புகிறோம். பூக்கள் அதிகம் பூக்கும் காலங்களில் தினசரி சுமார் 2 ஆயிரம் கிலோ பூக்கள் வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்புவோம். தற்போது தினசரி 500 கிலோ பூக்கள் கிடைப்பதே அரிதாக உள்ளது. பூக்களை சரமாக தொடுத்து அல்லது மாலையாக கட்டியும் அனுப்புகிறோம். சத்தியமங்கலம் மல்லிகை பூக்கள் அதிக மணமாக இருக்கும் என்பதால் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் ஏற்றுமதி தொழிலை மட்டும் நம்பி சத்தியமங்கலத்தில் சுமார் 600 பேர் இருக்கிறார்கள். வரத்து குறையும்போது பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றாலும், ஏராளமானவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

தனி மவுசு

சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி கூறியதாவது:-

சத்தியமங்கலம் வட்டாரத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூக்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இதில் 10 ஆயிரம் ஏக்கர் மல்லிகையும், 3 ஆயிரம் ஏக்கர் முல்லையும் நடவு செய்யப்பட்டு உள்ளது. மல்லிகையிலேயே சத்தியமங்கலம் மல்லிகைக்கு வெளி சந்தையில் தனி மவுசு உண்டு. அந்த அளவுக்கு வாசம் கொண்டதாகும். தற்போது பனிக்காலம் என்பதால் பூ வரத்து மிக மிக குறைந்துவிட்டது. சிறிய அளவில் விவசாயம் செய்பவர்களுக்கு அவர்களுக்கான கூலிகூட கிடைக்காத நிலை இருக்கிறது. இந்த நேரத்தில் பூ விவசாயிகளின் வருவாய்க்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்சாலை

சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

சத்தியமங்கலத்தில் இருந்து மல்லிகைப்பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து மொத்த வியாபாரிகள் பூக்களை விலைக்கு வாங்கி, சிறந்த முறையில் பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்துகிறார்கள். இதன் மூலம் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பூக்களின் தேவையும் அதிகரிக்கிறது. பனிப்பொழிவு காலத்தில் பூக்கள் வரத்து குறைவாக இருக்கும்போது விலை அதிகமாக இருக்கிறது. வெயில் காலங்களில் அதிக அளவில் பூக்கள் பூத்து வரத்து அதிகமாகும்போது வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் விலை குறையும். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண சத்தியமங்கலத்தில் நறுமண பொருள் தயாரிப்பு மற்றும் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story