உருமாறி மிரட்டும் கொரோனா 'ஓமைக்ரான் பி.எப்.7' மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா? - பொது சுகாதார இயக்குனர்- பொதுமக்கள் கருத்து


உருமாறி மிரட்டும் கொரோனா ‘ஓமைக்ரான் பி.எப்.7' மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா? - பொது சுகாதார இயக்குனர்- பொதுமக்கள் கருத்து

ஈரோடு

கொரோனா நோய்க் கிருமி அழிவே இல்லை என்பது போல் உருமாறிப் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் ஓலமிட்டது

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நோய்த் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அழையா விருந்தாளியாக அனைத்து நாடுகளிலும் ஊடுருவி சமூகப் பரவலாக மாறியது.

உலகமே ஓலமிட்டு அழும் வகையில் அந்தக் கொடிய நோய் தொற்றுக்கு சுமார் 45 லட்சம் பேர் உயிர் இழந்தனர்.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலும் அதன் பீதி அனைவரையும் தொற்றி இருந்தது.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டன.

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட உடன் கொரோனா தொற்று பரவலின் வேகத்துக்கும், வீரியத்துக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. அதனால் நோய் பற்றிய அச்சம் மக்கள் மனதில் மெல்ல, மெல்ல விலகியது. நாளடைவில் கொரோனா வைரசை சாதாரண காய்ச்சல் போன்று மக்கள் கருதத் தொடங்கினர். எனவே முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டன.

புது வடிவம்

கொரோனா கிருமி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஓமைக்ரான் என புதுப் புது வடிவில் உருமாறி அச்சுறுத்தினாலும் மக்கள் கவலை கொள்வதாக இல்லை.

இந்த நிலையில் கொரோனா கிருமியை உலகிற்கு அறிமுகம் செய்த சீனாவில் 'ஓமைக்ரான் பி.எப்.7' என்ற வடிவில் கொரோனா புதிய உருவம் எடுத்துள்ளது. இந்த நோய்க் கிருமி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குஜராத், ஓடிசா ஆகிய மாநிலங்களில் ஊடுருவிவிட்டது.

வீரியமான கொரோனா தொற்று போன்று இந்தக் கிருமியும் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகச் சுகாதார அமைப்பும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

அவசர ஆலோசனை

இந்த நிலையில் இந்தியாவில் ஓமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார். தமிழ்நாட்டிலும் இந்த நோய்க் கிருமி நுழைந்து விடாது தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இது பற்றிய மருத்துவ நிபுணர், பொதுமக்களின் பார்வை வருமாறு:-

மருத்துவ இயக்குனர்

தமிழக அரசின் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம்:-

கொரோனா தொற்று பற்றி அச்சம் கொள்ளாமல் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஓமைக்ரான் பி.எப்.5 கிருமி பரவியது. அதனை நாம் எளிதில் கடந்து வந்துவிட்டோம்.

தற்போது ஓமைக்ரான் பி.எப்.7 கிருமி பரவுகிறது. இந்த வைரஸ் கிருமி பரவல் வேகம்தான் அதிகம் இருக்கிறது. பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் 96 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது.

இதனால் புதிய வகை கொரோனா பரவலை பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை.

அதே நேரத்தில் இன்னும் கொரோனா கிருமி முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்கு செல்வதை முதியோர்கள் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதேப் போன்று சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். பண்டிகை காலங்கள் வருவதால் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது நல்லது.

முகக் கவசம் கொரோனா பரவலில் இருந்து மட்டுமல்ல காற்றில் பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.

கே.எஸ்.இசாரத் அலி

ஈரோடு புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கே.எஸ்.இசாரத் அலி கூறியதாவது:-

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, ஓமைக்ரான் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது உருமாறிய பி.எப்.-7 வைரஸ் மிரட்டுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்றே விரும்புகிறேன். ஏற்கனவே நாம் தடுப்பூசிகள் போட்டு இருக்கிறோம். பூஸ்டர் ஊசியை போட டாக்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே மருத்துவ ரீதியாக நாம் பாதிப்பில்இருந்து மீளும் நிலையில்தான் இருக்கிறோம். இதே நேரம் அரசு இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏழை மக்கள் முழுமையாக அரசு ஆஸ்பத்திரிகளையே நம்பி இருக்கிறார்கள். எனவே முன்னதாகவே ஆஸ்பத்திரிகளையும் மருத்துவ சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். பரவல் தொடங்கினால் அதற்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல், மக்களுக்கு இப்போதே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசின் அத்தனை துறைகளும் இணைந்து இந்த பணியில் ஈடுபட வேண்டும்.

இனிமேல் ஒரு ஊரடங்கினை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. பொருளாதார ரீதியாக மக்கள் மிகவும் சிரமப்பட்டு விடுவார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தன்னிச்சையாக பொதுமக்கள் தாங்களாகவே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அந்தோணி ஜான்சன்

ஈரோட்டை சேர்ந்த அந்தோணி ஜான்சன் கூறியதாவது:-

வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது வரவேற்கதக்கது.

அதே நேரம் இந்தியாவில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும், அது கடுமையாக மக்களை பாதிக்கும் வகையில் எடுத்துவிடக்கூடாது. பெரிய அளவிலான ஊரடங்குகள் போடப்பட்டால் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை அடைவார்கள். எனவே மீண்டும் கொரோனாவின் பாதிப்பு வந்து விடாமல் முன்கூட்டி தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசும், அரசுடன் மக்களும் இணைந்துசெயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை ஆசிரியை அருணாதேவி

திருநகர்காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருணாதேவி கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிதல், கைகள் கழுவுதலை அனைவரும் பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக இன்னொரு ஊரடங்கினை தாங்கிக்கொள்ள முடியாது. பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஏற்கனவே 2 ஆண்டுகள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள். 2 ஆண்டுகள் பள்ளிக்கூடம் இயங்காததால், பள்ளிக்கூடம் வருவதற்கோ, படிப்பதற்கோ ஆர்வமின்றி இருக்கிறார்கள். இல்லம்தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் இப்போதுதான் குழந்தைகளை செல்போன்களின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருகிறோம். இந்தநிலையில் இன்னொரு ஊரடங்கு வந்தால் நிலைமை மோசமாகி விடும். அதே நேரம் வைரஸ் பரவலை தடுக்கும் எளிமையான கட்டுப்பாடுகளை முன்கூட்டியே அமல் படுத்தி விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பழனிச்சாமி

வேளாண் துறை ஓய்வு பெற்ற பணியாளர் எம்.பழனிச்சாமி கூறியதாவது:-

கொரோனாவில் இருந்து நாம் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறோம். மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து இருக்கிறோம். மீண்டும் அப்படி ஒரு துர்பாக்கிய நிலை வந்துவிடக்கூடாது. தற்போது பரவி வரும் கொரோனா திரிபு வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆனால், எச்சரிக்கை நிலையில் இருப்பது தவறு இல்லை. பரவல் அதிகமாகி பாதிப்பு தொடங்கிய பிறகு தடுக்க முடியாது. எனவே இப்போது இருந்தே அரசின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, பாதிப்பு வராமல் தடுக்க வேண்டியது மக்களின் கடமையும் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அறச்சலூர் செல்வம்

இயற்கை விவசாயி அறச்சலூர் செல்வம் கூறியதாவது:-

வைரஸ் பரவலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க தாங்களே முன்வர வேண்டும். என்னென்னபாதுகாப்பு முறைகள் இருக்கிறதோ அவற்றை பின்பற்ற வேண்டும். கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடிப்பது என்ற பழமொழி போல இருக்க கூடாது. கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் தடுப்பு மூலிகை குடிநீர் மற்றும் மருத்துவ பயன்பாடுகளை முன்கூட்டியே தொடங்கிவிட வேண்டும். ஒரு வேளை வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டால், உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டிப்பாக வைரஸ் பாதிப்பை வென்று விடும். மிக இயலாத சூழல் இருந்தால் மருத்துவமனை செல்லலாம். ஆனால், எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை கைவிட்டு விடக்கூடாது. மனதை போன்ற மருத்துவர் யாரும் இல்லை என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். கொரோனா எந்த உருவில் வந்தாலும் அதை வெல்லும் ஆற்றல் நமக்கு உண்டு. அதற்கு தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story