காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடிகள் தஞ்சம்


காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.

திருச்சி

காட்டுப்புத்தூர் ஆவணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பூபதி மகன் விஜயகுமார் (வயது 25). இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் இலந்தக்கோட்டை குஜிலியம்பாறையை சேர்ந்த ராமசாமி மகள் மாரியம்மாள் (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் ஸ்ரீராம சமுத்திரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் திருமணத்துக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததால், அவர்களுடன் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இதேபோல் காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஸ்ரீராம சமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவா (22). கொத்தனாரான இவரும் வேலம்பாளையம் அழகு நாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகள் அனிதா (19) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் காட்டுப்புத்தூர் அருகே ஸ்ரீராம சமுத்திரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இருவரும் பாதுகாப்பு கேட்டு காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த தம்பதிக்கு இடையூறு செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story