காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம்
காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலநிலை உள்ளது. இதை தவிர்க்க பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலநிலை உள்ளது. இதை தவிர்க்க பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி (மேற்கு) அமைந்துள்ளது. இந்த பள்ளி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை உயர்நிலைப்பள்ளியாகவும், 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை அரசு மேல்நிலைப்பள்ளியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 460 மாணவர்கள், 610 மாணவிகள் என மொத்தம் 1,070 பேர் படித்து வருகிறார்கள். ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் 34 ஆசிரிய-ஆசிரியைகளும், 5 அலுவலக பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இங்கு சாரண சாரணியர் அமைப்பு, இளையோர் செஞ்சிலுவை சங்கம், பசுமை படை, பெண்கள் பாதுகாப்புக்குழு போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
மரத்தடியில் மாணவ-மாணவிகள்
இந்த பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் 5 பேரும், ஊரக திறனாய்வு தேர்வில் 2 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2 மாணவிகள் `நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டருக்கு படித்து வருகிறார்கள். மேலும் இங்கு படித்த மாணவ-மாணவிகள் மருத்துவராகவும், அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பும் படித்து முடித்துள்ளனர்.
சிறந்த மாணவர்களை உருவாக்கும் இந்த அரசு பள்ளியில் தற்போது 23 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. 1,070 பேர் படிக்கும் இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. அத்துடன் மாணவ-மாணவிகள் விளையாட மைதானமும் இல்லை. போதிய வகுப்பறைகள் இல்லாததால், 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் தலா 3 பிரிவு மாணவ-மாணவிகள் தற்போது மரத்தடியில் அமர்ந்து படித்து வருகிறார்கள்.
ஆங்கில வழிகல்வி
இந்தநிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் வகுப்புகளை இந்த பள்ளியில்ஆங்கில வழியில் கற்றுக்கொடுக்க பள்ளி மேலாண்மை குழு கோரிக்கை விடுத்து ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதனால்அலுவலக பயன்பாட்டுக்கும், நூலக பயன்பாட்டுக்கும், மாணவ-மாணவிகள் அமர்ந்து படிக்கவும் கூடுதலாக 10 வகுப்பறைகள் தேவை.
காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம், விளையாட்டு மைதானம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தேவை என்று மாவட்ட நிர்வாகத்துக்கும், மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கும் பல முறை கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
கூடுதல் வகுப்பறைகள்
காட்டுப்புத்தூர் காந்திநகரை சேர்ந்த எம்.சித்ரா:- காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எனது குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பு இல்லாத காரணத்தினால் எனது குழந்தைகள் உள்பட 6, 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் செலுத்த முடியாததாலும், அரசு பள்ளியில் படித்தால் மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு கிடைக்கும் என்பதாலும் தான் அரசு பள்ளிக்கு அதிக அளவில் மாணவ-மாணவிகள் வர தொடங்கி உள்ளனர். அதற்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை இல்லாதது வருத்தம் அளிக்கிறது. எனவே போதுமான வகுப்பறைகளை கட்டி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வகுப்புகளில் பாடம் படிக்கும் நிலையை கொண்டு வர வேண்டும்.
வெயில் வாட்டி வதைக்கிறது
காட்டுப்புத்தூரை அடுத்த கல்லூர் பட்டியை சேர்ந்த மகாமுனி:- எனது குழந்தை இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறது. போதுமான வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மாணவர்கள் மரத்தடியில் நிழலை தேடி பல்வேறு இடங்களுக்கு உடனுக்குடன் மாறி, மாறி அமர்வதை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது. மழை நேரங்களில் வராண்டாவிலும், ஒரே வகுப்பறையிலும் அமர வைக்கும் நிலை உள்ளது. எனவே இந்தபள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும்.
விளையாட்டு மைதானம்
காட்டுப்புத்துரை வி.எஸ்.நகரை சேர்ந்த சவுந்தரராஜன் :- எனது மகன் இந்த பள்ளியில் படித்து வருகிறான். எனது மகன் சிறு வயதிலிருந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். ஆனால் இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள் விளையாட போதிய விளையாட்டு மைதானம் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. விளையாட்டு துறையில் சாதனை மாணவர்களை உருவக்க உடற்கல்வி ஆசிரியரும் இல்லாதது ஒரு பெரும் குறையாக உள்ளது. மாணவ- மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கவனம் செலுத்த இந்த பள்ளிக்கு ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
ஆசிரியர்
சீலைபிள்ளையார்புத்தூரை சேர்ந்த சிவக்குமார்:- இந்த பள்ளியில் எனது குழந்தை 8-ம் வகுப்பு படித்து வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் நடவடிக்கையை கண்காணிக்கவும், ஒழுக்கத்தை கவனிக்கவும், மாணவ-மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்கவும் விளையாட்டு ஆசிரியர் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. மேலும் இப்பள்ளிக்கு நூலகம் கட்டிடம் உள்பட 10 புதிய வகுப்பறை கட்டிடங்கள் இந்தப்பள்ளிக்கு தேவை.
மருத்துவராக...
காட்டுப்புத்தூர் வி.எஸ். நகரை சேர்ந்த சுதா:- எனது இரு குழந்தைகளும் தற்போது அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படித்த எனது உறவினர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் படித்த மற்றொரு பெண் தற்போது பொறியியல் துறையில் சிறந்து விளங்குகிறார். இப்படி பல சிறப்புகள் வாழ்ந்த இந்தப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு உடன் செய்து தந்து கல்வி விளையாட்டில் இந்த பள்ளி மேலும் வளர்ச்சி அடைய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறியுள்ளனர்.