கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கி உள்ளது.
வைகாசி திருவிழா
கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இப்பகுதி பொதுமக்களுக்கு காவல் தெய்வமாகவும், மழை தரும் தெய்வமாகவும் போற்றப்பட்டு வருகிறது.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா மெவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டு வைகாசி திருவிழா நேற்று கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.முன்னதாக கரூர் மாரியம்மன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாலம்மாள்புரம் மூப்பன் வகையறாவை சேர்ந்த செந்தில்மூப்பன், வினித்மூப்பன் ஆகியோரின் கனவில் தோன்றி முக்குலைகளை கொண்ட கம்பம் இருக்கும் இடத்தை காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து நேற்று அதிகாலை முக்குலை கம்பம் பாலம்மாள்புரம் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு பாலம்மாள்புரத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே கொண்டு வரப்பட்டது. பின்னர் கம்பத்திற்கு வேப்பிலை சுற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கம்பத்திற்கு சிறப்பு ஆராதனை நடந்தது.
ஊர்வலம்
தொடர்ந்து பாலம்மாள்புரத்தில் இருந்து கம்பம் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமமான ஐந்து ரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வழியாக மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.அப்போது ஒவ்வொரு வீதியிலும் சாலையில் இருபுறங்களில் நின்ற பக்தர்கள் கம்பத்தை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். கோவிலுக்கு கொண்டு வந்த கம்பம் பிறகு கோவில் தர்கர்த்தாவிடம் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் நேற்று மாலை அந்த கம்பம் மேள தாளம் முழங்க அமராவதி ஆற்றிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு கம்பத்தை செதுக்கி சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கம்பவம் அமராவதி ஆற்றில் இருந்து ஊர்வலமாக மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, கோவில் முன்பு நடப்பட்டது. பின்னர் அந்த கம்பத்திற்கு திரளான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர்.
பூச்சொரிதல் விழா
ெதாடர்ந்து 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை)பூச்சொரிதல் விழாவும், 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காப்பு கட்டுதலும், 29-ந்தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும் நடைபெற உள்ளது.மேலும் 28, 29, 30, 31-ந்தேதிகளில் மாவிளக்கும், பால்குடமும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 31-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.