கரூர் உழவர்சந்தை பராமரிப்பு பணிகள் நிறைவு
கரூர் உழவர்சந்தை பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் நாளை முதல் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உழவர்சந்தை
கரூர் உழவர்சந்தை பழைய பஸ்நிலையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. கரூர் உழவர்சந்தை 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு மொத்தம் 60 கடைகள் உள்ளன. கரூர் உழவர்சந்தைக்கு தினமும் சராசரியாக 120 விவசாயிகள் வருகை புரிகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தினமும் வருகை புரிந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 18 மெட்ரிக் டன் வரை காய்கறிகள் வரத்து வருகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு பண்டிகை நாட்களில் 150 முதல் 160 விவசாயிகள் வருகை புரிவார்கள்.
அப்போது 25 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து இருக்கும். இந்த உழவர் சந்தை தினமும் காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கரூர் உழவர்சந்தையை ரூ.18 லட்சத்தில் மேம்படுத்தும் வகையில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி, நடைபாதை சீரமைப்பு, கடைகளில் மேற்கூரைகள், தளங்கள் அமைப்பது, அலுவலகம் மேற்கூரை, தளங்கள் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன.
நாளை முதல்...
பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் உழவர்சந்தை காலை 8 மணி வரை செயல்பட்டு வந்தது. பின்னர் கடைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கரூர் உழவர்சந்தை வெங்கமேடு குளத்துப்பாளையம் உழவர் சந்தையில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் கரூர் உழவர்சந்தை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கரூர் உழவர்சந்தை நுழைவுவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.