கோடை விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்ட பள்ளிகள் திறப்பு


கோடை விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்ட பள்ளிகள் திறப்பு
x

கோடை விடுமுறைக்கு பிறகு கரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. உற்சாகத்துடன் வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

கரூர்

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் மாணவ-மாணவிகள் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை மீண்டும் தமிழக அரசு தள்ளி வைத்தது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவ-மாணவிகள் உற்சாகம்

இதனால் மாணவ-மாணவிகள் பலர் பள்ளி சீருடைகளிலும், ஒரு சில மாணவர்கள் வேறு ஆடைகளையும் அணிந்து உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளியில் பழைய நண்பர்களை சந்தித்து ஆரத்தழுவியும், கைகுலுக்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சில மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நேரடியாக பள்ளிக்கு வந்து விட்டு சென்றனர். காலையில் பள்ளிகள் இறை வணக்கத்துடன் தொடங்கியது. அப்போது மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தும், அறிவுரைகளையும் வழங்கினர்.

பாடப்புத்தகங்கள் வழங்கல்

பின்னர் வகுப்பறைக்கு சென்ற மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. பின்னர் நேற்று காலையில் இருந்து மாலை வரை மாணவர்கள் பள்ளியில் சொல்லி கொடுத்த பாடங்களை படித்தனர். பின்னர் புன்முகத்துடன் மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி குமரன் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, அனைவருக்கும் கல்வி இயக்க உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி பாராட்டினர்.

வெள்ளியணை

வெள்ளியணை பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று காலை ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து ஆசிரியைகள் வரவேற்றனர். அப்போது நல்ல முறையில் கல்வி கற்று நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மாணவிகளுக்கு அறிவுைர வழங்கினார்.

குளித்தலை

குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 6-ம் வகுப்பில் சேர்ந்து முதன் முதலாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை வரவேற்கும் விதமாக அவர்களுக்கு பூ, பூங்கொத்து, இனிப்புகள் வழங்கியும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.

நொய்யல்

நொய்யல், நடையனூர், புகழூர், காகித ஆலை, புன்னம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மேல்நிலை பள்ளிகள் நேற்று காலை திறக்கப்பட்டன. பின்னர் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர். பின்னர் இறைவணக்கம் முடிந்தவுடன் வகுப்பறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் பழைய நண்பர்களை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி தலைமையிலான ஆசிரியர்கள் புத்தகங்களை வழங்கி வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து சென்றனர்.


Next Story