கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி


கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி
x

ஐகோர்ட்டு உத்தரவுபடி முடிவு அறிவிக்கப்பட்டதில் கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி ெபற்றது.

கரூர்

துணைத்தலைவர் தேர்தல்

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.க.வும் தன்வசப்படுத்தி சம பலத்துடன் உள்ளன. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளார். ஆனால் துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கான தேர்தல் சில காரணங்களால் 5 முறை தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்றும், நீதிபதிகள் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து கடந்த 19-ந்தேதி துணைத்தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட கரூர் மாவட்ட கவுன்சிலர் திருவிகா என்பவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் திண்டுக்கலில் இருந்து காரில் கரூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வேடசந்தூர் பகுதியில் காரில் வந்த திருவிகாவை மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டனர்.

இதனால் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கூடி நின்ற அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு மற்றும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து கவுன்சிலர் திருவிகாவிற்கு பதிலாக துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. சார்பில் கரூர் மாவட்ட 12-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. சார்பில் 5-வது வார்டு கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன் என்பவர் போட்டியிட்டார்.

தி.மு.க. கவுன்சிலர் வெற்றி

இதையடுத்து தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த 5 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு படி சீல் வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டு தேர்தல் விவரங்களை ஆய்வு செய்து நடந்து முடிந்த மாவட்ட துணைத்தலைவருக்கான தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என உத்தரவிட்டது.

அதன்படி கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று இரவு ேதர்தல் முடிவுகளை வெளியிட்டார். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தேன்மொழி தியாகராஜன் 7 வாக்குகள் பெற்று மாவட்ட துணைத்தலைவராக வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் 4 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.


Next Story