கருப்பந்துறை, தியாகராஜநகரில் சீராக குடிநீர் வழங்க வேண்டும்-மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


கருப்பந்துறை, தியாகராஜநகரில் சீராக குடிநீர் வழங்க வேண்டும்-மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x

நெல்லை கருப்பந்துறை, தியாகராஜநகரில் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பொது மக்கள் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை கருப்பந்துறை, தியாகராஜநகரில் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் பொது மக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொது கழிப்பிடம்

பேட்டை விஸ்வநாதநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், விஸ்வநாத நகர் பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலப்பாளையம் வசந்தாபுரம் செல்லத்துரை கொடுத்த மனுவில் தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

டவுன் சாலியர் தெரு, காமாட்சி அம்மன் கோவில், புட்டாரத்திம்மன் கோவில், நல்லமுத்தம்மன் கோவில் தெருக்கள், ரெங்கநாதபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், தங்களது பகுதியில் பொது கழிப்பிட வசதி செய்து தர வலியுறுத்தி இருந்தனர்.

வண்ணார்பேட்டை சாலைத்தெரு வடபகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், வருகிற மழைக்காலத்துக்கு முன்பே மழைநீர் வடிகால் கட்டித்தர வேண்டும்.

சீரான குடிநீர்

கருப்பந்துறை பகுதி பெண்கள் கொடுத்த மனுவில், "எங்கள் ஊருக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் சீராக கிடைக்கவில்லை. தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த போதிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஇருந்தனர்.

தியாகராஜநகர் 4-வது தெற்கு தெரு மற்றும் தென் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று கூறிஇருந்தனர்.

டவுன் பாட்டப்பத்து அண்ணா குடியிருப்பை சேர்ந்த நடராஜன் அளித்த மனுவில், "கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றில் ரசாயனங்களை கொண்டு சலவை செய்வதால் குடிநீர் பாதிக்கப்படுகிறது என்றும், கெட்வெல் மார்க்கெட் வியாாரிகள், ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

குப்பை தொட்டி

பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த மனுவில், பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவில் பகுதிகளில் குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி தெருக்களில் சிதறி கிடக்கிறது. அவற்றை தினமும் சீராக அகற்ற வேண்டும் என்று கூறிஇருந்தார்.

இந்த கூட்டத்தில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், கிறிஸ்டி, காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story