விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதியில் கருணாநிதி பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதியில் கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க.வினர் கொண்டாடினர்
எட்டயபுரம்:
விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதியில் கருணாநிதி பிறந்தநாள் விழாவை தி.மு.க.வினர் கொண்டாடினர்.
கருணாநிதி பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் தொகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, ஏழைகளுக்கு புத்தாடைகள், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்தில் அன்னதானம், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் விளாத்திகுளம், குளத்தூர், குறுக்குச்சாலை, பசுவந்தனை, கீழஈரால், எட்டயபுரம், நாகலாபுரம், புதூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. குளத்தூரில் ஏழை எளியவர்களுக்கு புத்தாடைகள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தங்க மோதிரம்
செமப்புதூர், நாகலாபுரம், எட்டயபுரம் ஆகிய இடங்களில் ஆதரவற்றோர், முதியோர் மனநலம் குன்றியோர் காப்பகங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.
எட்டயபுரம், புதூர் பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.
குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புராஜன், ராஜாக்கண்ணு, பேரூர் கழக செயலர் வேலுச்சாமி, ஒன்றியச் செயலர்கள் நவநீத கண்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்ன மாரிமுத்து, காசி விஸ்வநாதன், ஆர்.கே.பி.ராஜசேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாயர்புரம்
ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.வினர் சாயர்புரம், சிவத்தையாபுரம், புளியநகர், நடுவக்குறிச்சி, சாயர்புரம் ஆகிய பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவி தலைமை தாங்கினார்.
சாயர்புரம் நகர பஞ்சாயத்து தலைவி பாக்கியலட்சுமி, சாயர்புரம் கூட்டுறவு வங்கி தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாயர்புரம் மெயின் பஜாரில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கூட்டாம்புளியில் உள்ள அன்பு முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. புளியநகர் பள்ளி மாணவர்களுக்கு இலவச பைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் நகர தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் பசுவந்தனை மற்றும்
குறுக்குச்சாலையில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் பயணிகள் விடுதி முன்பு கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் கருணாநிதி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். கோவில்பட்டி தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவில்பட்டி-எட்டயபுரம் ரோடு சந்திப்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பா.மு.பாண்டி தலைமையில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, 50 பேருக்கு இலவச வேட்டி, ேசலைகளை மொழிப்போர் தியாகி பா.முத்து வழங்கினார்.
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினார். நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.