கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கருணாநிதி பிறந்தநாள் விழா
ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் அருகே நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். பின்னர் அவர் தி.மு.க. கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு தி.மு.க. சார்பில் இலவச உணவை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஒட்டன்சத்திரம் நகர தி.மு.க. செயலாளரும், நகராட்சி துணைத் தலைவருமான ப.வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகானந்தம், தனபாக்கியம்ராமசாமி, வக்கீல்கள் ஜெயராஜ், பெருமாள், நகராட்சி கவுன்சிலர்கள் அருள்மணி, நாட்ராயன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பழனி
இதேபோல் பழனியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மயில் ரவுண்டானா பகுதியில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கருணாநிதி உருவப்படத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனை தொடர்ந்து பழனி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க காசு வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, முன்னாள் நகராட்சி தலைவர் வேலுமணி கவுன்சிலர்கள் செபாஸ்டின், சுரேஷ், காளீஸ்வரி, பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பழனி நகர், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் என பல்வேறு இடங்களிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
சாணார்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட கவுன்சிலருமான க.விஜயன் தலைமையில் நடந்தது. விழாவில் கோபால்பட்டி பஸ்நிறுத்தம், சாணார்பட்டி பஸ்நிறுத்தம் ஆகிய இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தி.மு.க. கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.
சின்னாளப்பட்டி
சின்னாளப்பட்டியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன் கட்சி கொடியை ஏற்றி, கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் செக்காப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்று கட்சியை சேர்ந்த 25 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நத்தம்
நத்தத்தில் ஒன்றிய, நகர, தி.மு.க. சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, நகர செயலாளர் முத்துகுமார்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது. மீனாட்சிபுரம், பஸ் நிலையம், அசோக்நகர், அவுட்டர், மாரியம்மன் கோவில் தெரு, தர்பார் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.
கன்னிவாடி
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பழக்கனூத்து ஊராட்சியில் பழைய எட்டமநாயக்கன்பட்டி, பழக்கனூத்து ஏடி காலனி ஆகிய பகுதிகளில் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய துணைச் செயலாளர் விவேகானந்தன், செம்மடை ராமசாமி, செந்தில்குமார், பொட்டி நாயக்கன்பட்டி சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு 10 கிலோ மற்றும் 5 கிலோ அரிசி மூட்டைகளை வழங்கினர்.
நலத்திட்ட உதவிகள்
வடமதுரை மற்றும் அய்யலூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் கலந்துகொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து தி.மு.க கட்சி கொடியை ஏற்றி வைத்தார். வடமதுரையில் பொதுமக்களுக்கு இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
அய்யலூரில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர்கள் கணேசன் (வடமதுரை), கருப்பன் (அய்யலூர்) மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.