சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு


சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு
x
தினத்தந்தி 28 May 2022 5:42 AM IST (Updated: 28 May 2022 9:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று (சனிக்கிழமை) திறந்துவைக்கிறார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் 28-ந்தேதி (இன்று) மாலை 5.30 மணியளவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்துவைக்க உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் நடைபெறும், விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழா பேருரையாற்றவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றவும் உள்ளனர்.

5 முறை முதல்-அமைச்சர்

அரை நூற்றாண்டு காலத் தமிழ்நாட்டு அரசியலின் மையமாகத் திகழ்ந்தவர், 60 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்கு சொந்தமானவர், 5 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பணியாற்றியவர். அனல் பறக்கும் தம் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர்.

கதை, கவிதை, புதினங்கள், வரலாற்று புதினங்கள், நாடகம் என, தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிகரற்ற தனி பெருந்தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.

13 முறை சட்டமன்ற உறுப்பினர்

கருணாநிதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். தமது இளம் வயதிலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தமையால், பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும் சிறந்து விளங்கினார்.

கருணாநிதி 1957-ம் ஆண்டு முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்தார். 1969-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு தமிழ்நாடு முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

சிறப்பான திட்டங்கள்

இதன் தொடர்ச்சியாக 1971, 1989, 1996, 2006-ம் ஆண்டுகளில் 5 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பணியாற்றி, தாய் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம், தமிழ்ச் சமுதாய மக்கள் கல்வியிலும், சமூக நீதியிலும், பொருளாதாரத்திலும் மேம்பட பல்வேறு சிறப்பானத் திட்டங்களை செயல்படுத்தித் தமிழகத்தை இந்திய திருநாட்டின் முன்னோடி மாநிலமாகத் திகழச்செய்தார் என்றால் அது மிகையில்லை.

வாழும்போது வரலாறாகவும், மறைந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்துள்ள கருணாநிதியின் சிலைதிறப்பு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story