"கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும்" - ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் திமுக உயர்நிலை செயல் திட்ட குழு என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3-ந் தேதியில் இருந்து வெகு விமரிசையாக கொண்டாட தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதையொட்டி 3-ந் தேதி மாலை வடசென்னையில் தி.மு.க. தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிகச் சிறப்பாக நடத்துவதற்காக தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி., இவர்களுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் டி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன் முத்துராமலிங்கம், திருச்சி சிவா, கும்மிடிப்பூண்டி வேணு, குத்தாலம் கல்யாணம், பூச்சி முருகன் மற்றும் 23 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை வரும் ஜூன் 3-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 3 ம் தேதி வரை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். ஜூன் 3-ல் வடசென்னையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். இணைய வசதியுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்கள் தொடங்க முடிவு கூட்டத்தில் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதியன்று நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஜனாதிபதி பங்கேற்கும் 5-ந் தேதியன்று விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.