கருணாநிதி பிறந்தநாள் விழா


கருணாநிதி பிறந்தநாள் விழா
x

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி பாளையங்கோட்டை சிவந்திப்பட்டியில் பஞ்சாயத்து தலைவர் பெருமாத்தாள் கட்சி கொடியேற்றினார். விழாவில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன், பாளை.ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் இசக்கிபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகர் ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் அசைவ உணவு வழங்கப்பட்டது.

திசையன்விளை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா, திசையன்விளை பேரூராட்சியில் செயல் அலுவலர் கோபால் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்புராஜன் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டினார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'குப்பை எனது பொறுப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம், மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் சுகாதார ஆய்வாளர் நவராஜ், மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அம்பை

அம்பை யூனியனில் உள்ள 13 பஞ்சாயத்துகளில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்களும், கழக முன்னோடிகள் 200 பேருக்கு வேட்டியும் வழங்கப்பட்டது. ஆதரவற்றோர் காப்பகத்தில் முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர், துணைத்தலைவர் ஞானகனி, மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் ஜோதி கல்பனா பூதத்தான் (மன்னார்கோவில்), முத்துகிருஷ்ணன் (அயன்சிங்கம்பட்டி), சாரதா சுப்பிரமணியன் (சாட்டுப்பத்து), துணைத்தலைவர்கள் நிர்மலா சங்கர், சுடலை அரசன், வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

களக்காடு

களக்காடு அருகே சூரங்குடியில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், களக்காடு நகராட்சி துணைத்தலைவருமான பி.சி.ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல், சூரங்குடி கிளை செயலாளர் கொம்பையா, முகிலன், கனியப்பா, முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story