கார்த்திகை தீபத் திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை பட்டாபிஷேகம்


கார்த்திகை தீபத் திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை பட்டாபிஷேகம்
x

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், அன்னம், வெள்ளி பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (5-ந் தேதி) மாலை 7 மணி அளவில் கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அதைதொடர்ந்து (6-ந்தேதி) நாளை மறுநாள் காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிறிய வைர தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடிக்க சுவாமி ரத வீதிகள் வழியாக தேர் சுற்றி வந்து நிலையை அடையும். தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


Next Story