காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பு - ஒழுங்காற்று குழு கூட்டத்திலும் திட்டவட்டம்


காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பு - ஒழுங்காற்று குழு கூட்டத்திலும் திட்டவட்டம்
x

கர்நாடக அணைகளில் இருக்கும் நீர் குடிநீருக்கே போதாது, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.

தமிழக நெற்களஞ்சியமான தஞ்சைஉள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை நம்பியே சாகுபடி செய்து வருகிறார்கள்.

நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் 12-ந் தேதி டெல்டா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் வழங்கவில்லை.

இதனால் காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருகின. கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதனையடுத்து காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் காவிரி ஆணைய கூட்டத்திலும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். காவிரி ஆணைய உத்தரவின்படி கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இந்த நிலையில் நீர் இருப்பு குறைந்ததாக கூறி தண்ணீர் திறப்பை கடந்த 8-ந் தேதி கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது.

எனவே காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 86-வது கூட்டம் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். காவிரியோடு தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர். குழுவின் செயலாளர் டி.சர்மாவும் கலந்து கொண்டார்.

கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநில அணைகளின் நீர் இருப்பு விவரம், மழை அளவு மற்றும் நீர்ப்பாசன விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 29-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவு பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது, காவிரியில் இருந்து தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரின் அளவு குறித்தும், தற்போது தேவைப்படும் மற்றும் அடுத்த மாதத்துக்கு தேவையான நீரின் அளவு குறித்தும் தமிழ்நாடு அதிகாரிகள் பேசினார்கள்.

தமிழ்நாட்டுக்கு 8 டி.எம்.சி நீர் நிலுவையாக இருப்பதாகவும், நடப்பு மாதம் (செப்டம்பர்) 36.76 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும், கடந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவின்படி கர்நாடக அரசு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறக்கவில்லை என்றும்,இதனால் விவசாயம் பாதித்து உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கர்நாடக அதிகாரிகள் இதனை மறுத்ததுடன், தமிழ்நாடு அரசு இதை தேவையில்லாமல் அரசியல் ஆக்குவதாகவும் குற்றம் சாட்டினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்று குழு, அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதுபற்றி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டத்தை 29-ந் தேதி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக கர்நாடக நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள அம்மாநில துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் நேற்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போதைய சூழ்நிலையில் நம்மிடம் காவிரி படுகையில் உள்ள அணைகளில் போதிய நீர் இல்லை. இருக்கும் நீர் குடிநீர் பயன்பாட்டிற்கே போதாது. இந்த உண்மை நிலையை அந்த கூட்டத்தில் நமது அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.

தற்போது அணைகளில் இருக்கும் நீரை குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அந்த கூட்டத்தில் நமது அதிகாரிகள் கேட்பார்கள். தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை நிறுத்திவிட்டோம். மழை வரட்டும் என்று நாம் பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

காவிரியில் 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்ததை தொடர்ந்து மீண்டும் டி.கே.சிவக்குமார் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், '5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் தற்போது அணைகளில் போதிய நீர் இல்லை. குடிநீருக்கே போதவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. டெல்லியில் உள்ள சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

காவிரி நதிநீர் ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் கர்நாடகத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும். நேரில் வந்து கூட தெரிந்து கொள்ளலாம்.

காவிரி ஆணையம் அரசியல் பின்புலத்தில் செயல்படுவதாக குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆணைய உறுப்பினர்கள் நீதிபதிகள் போன்ற பொறுப்பில் உள்ளவர்கள். மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் அதில் அங்கம் வகிக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை கர்நாடகம் செயல்படுத்த தவறும் பட்சத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அதனை உத்தரவாக பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story