கறம்பக்குடி அரசு அலுவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டது


கறம்பக்குடி அரசு அலுவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டது
x

கறம்பக்குடியில் பயன்பாடு இன்றி பாழடைந்து கிடந்த அரசு அலுவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டது. விரைவில் அங்கு புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுக்கோட்டை

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பொதுப் பணித்துறைக்கு சொந்தமான அரசு அலுவலர்கள் குடியிருப்பு உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு வீடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பிற அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தனர்.

இதன் மூலம் கறம்பக்குடி பகுதி பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பணிகளுக்காக இந்த குடியிருப்புகளில் தங்கியிருந்த அதிகாரிகளை எந்த நேரத்திலும் எளிதில் சந்திக்க முடிந்தது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் இந்த குடியிருப்பில் தங்கி இருந்ததால் பல்வேறு அரசு சான்றிதழ் தொடர்பான பணிகள் விரைவில் நடைபெற்று வந்தன. இதனால் மாணவர்கள், விவசாயிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைந்து வந்தனர்.

கட்டிடங்கள் இடிக்கப்பட்டன

இந்நிலையில் பழமை காரணமாக இந்த கட்டிடம் பழுதடைந்தது, கட்டிட சுவர்களிலில் வெடிப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலை உருவானது. இதனால் இங்கு தங்கி இருந்த அரசு அலுவலர்கள் குடியிருப்பை காலி செய்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த குடியிருப்பு விடுகள் பழுதடைந்து பாழடைந்து கிடந்தது. கட்டிட சுவர்கள் எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே நடமாடி வந்தனர். இதுகுறித்து தினத்தந்தியிலும் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து அந்த அரசு அலுவலர்கள் குடியிருப்பை இடித்து அகற்றும் பணி நேற்று தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழுதடைந்த இந்த கட்டிடத்தால் அசம்பாவிதம் நிகழுமோ என அச்சத்துடன் இருந்தோம். தற்போது கட்டிடம் இடிக்கப்படுவது நிம்மதியாக உள்ளது. கறம்பக்குடியில் முக்கியமான சில அரசு அலுவலகங்களுக்கு கட்டிடம் இல்லாத நிலை உள்ளது. விரைவில் இங்கு புதிய கட்டிடம் கட்டி அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர்கள் குடியிருப்பை உருவாக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story