கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரை உல்லாச படகு சவாரி


கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரை உல்லாச படகு சவாரி
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைவரை உல்லாச படகு சவாரியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைவரை உல்லாச படகு சவாரியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

உல்லாச படகு சவாரி

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் கன்னியாகுமரி கடலின் நடுவே பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று ரசித்து வருகின்றனர்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2019-ம் ஆண்டு ரூ.8.25 கோடியில் திருவள்ளுவர், தாமிரபரணி என்ற 2 புதிய நவீன படகுகள் வாங்கப்பட்டன. அதன்பிறகு அந்த படகுகள் இயக்கப்படாமல் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதளத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த படகுகளை சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்காக கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை செல்லும் வகையில் உல்லாச படகு சவாரி இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து தளத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு படகு சவாரியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் நவீன சொகுசு படகு கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றது. அதில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடு பயணம் செய்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு 4½ கடல் நாட்டிக்கல் மைல் தொலைவு ஆகும். கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதளத்தில் இருந்து புறப்படும் இந்த நவீன சொகுசு படகுகள் கன்னியாகுமரி அருகில் உள்ள சின்னமுட்டம் வழியாக வட்டக்கோட்டை வரை செல்லும். பின்னர் அதே வழியில் மீண்டும் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதளத்தை வந்தடையும். இதற்கான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும்.

225 இருக்கைகள்

தாமிரபரணி நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 75 சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 19 இருக்கைகளும், 131 சாதாரண இருக்கைகளும் சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய இருக்கைகளில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.450-ம், சாதாரண இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.350-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, "பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் மூலமாக இந்த 2 புதிய படகுகளை இயக்குகிறோம். இரண்டு படகுகளும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்தில் இருந்து புறப்பட்டு சின்ன முட்டம் வழியாக வட்டக்கோட்டை கடல் பகுதியை சென்றடையும். பின்னர் மீண்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்திற்கு வந்து சேரும். இந்த படகு சவாரியானது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும்." என்றார்.


Next Story