விமான நிலையத்திற்கு இணையாக கன்னியாகுமரி ரெயில் நிலையம் மாறும்


விமான நிலையத்திற்கு இணையாக கன்னியாகுமரி ரெயில் நிலையம் மாறும்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரூ.49¼ கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு இணையாக ரெயில் நிலையம் மாறுகிறது என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரூ.49¼ கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு இணையாக ரெயில் நிலையம் மாறுகிறது என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

ரெயில்வே மேலாளர் ஆய்வு

கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ.49¼ கோடியில் மறுசீரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவு மண்டபம் போல் வடிவமைக்கப்பட்டு அழகு படுத்தப்படுகிறது. மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

கூடுதல் டிக்கெட் கவுண்ட்டர்கள், ஓய்வறைகள், கழிவறைகள் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

அங்கு ரெயில் நிலைய விரிவாக்க பணிகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளக்க படங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்து தனி ரெயில் மூலம் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம், டவுன் ரெயில் நிலையம் ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.

விமானநிலையம் போல மாறும்

முன்னதாக கன்னியாகுமரியில் தெற்கு ரெயில்வே மேலாளர் ஆர்.என்.சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரூ.49¼ கோடியில் மேம்பாட்டு பணிகள் நடக்க இருக்கிறது. விமான நிலையத்திற்கு இணையாக கன்னியாகுமரி ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் கன்னியாகுமரிக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிவடைந்ததும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story