ஒடிசாவில் ரெயில்கள் விபத்து எதிரொலி: கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து


ஒடிசாவில் ரெயில்கள் விபத்து எதிரொலி: கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
x

ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்து காரணமாக கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்து காரணமாக கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிசாவில் ரெயில்கள் விபத்து

ஒடிஷா மாநிலத்தில் 3 ரெயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 270-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனால் அந்த வழியாக செல்லும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரத்து

அதன்படி கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், நெல்லை, மதுரை, அரியலூர், சென்னை, நெல்லூர், விஜயவாடா வழியாக ஹவுரா செல்லும் ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் ரத்து செய்யப்பட்டது. இந்தரெயில் சனிக்கிழமை தோறும் காலை 5.55 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம். முன்னதாக அந்த ரெயிலில் பயணம் செய்ய ஏராளமான பயணிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் காத்திருந்தனர்.

ரெயில் ரத்து செய்யப்பட்டதை அறிந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை வரக்கூடியது ஆகும். எனவே குமரி மாவட்ட மக்கள் அந்த ரெயிலில் பயணம் செய்திருப்பார்கள் என்ற சாத்தியம் குறைவு தான். இருப்பினும் ரெயில்வே கட்டுப்பாட்டு அறையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் விவரங்கள் குறித்து கேட்கப்பட்டுள்ளது" என்றனர்.


Next Story