தண்டவாளத்தில் லாரி டயர் - கன்னியாகுமரி விரைவு ரெயில் மோதி பாதிப்பு


தண்டவாளத்தில் லாரி டயர் - கன்னியாகுமரி விரைவு ரெயில் மோதி பாதிப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 2 Jun 2023 3:29 AM GMT (Updated: 2 Jun 2023 4:59 AM GMT)

தண்டவாளத்தில் லாரி டயர் மீது கன்னியாகுமரி விரைவு ரெயில் மோதி பாதிப்படைந்துள்ளது.

திருச்சி,

கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு சென்றது. இந்த ரெயில் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த புதுக்குடி கிராமம் அருகிலுள்ள மேலவாளாடி பகுதிக்கு நள்ளிரவு சுமார் 1.05 மணிக்கு வந்தது. அப்போது திடீரென்று தண்டவாளத்தின் நடுவில் தடுப்பு போன்ற 2 பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனித்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.

ரெயில் அருகில் வந்தபோது தண்டவாளத்தில் நிற்க வைத்த நிலையில் ஒரு டயரும், படுக்க வைத்த நிலையில் மற்றொரு டயரும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதிக வேகத்தில் ரெயில் வந்ததால் அந்த டயர்கள் மீது மோதியது. பயங்கர சத்தம் கேட்டதுடன் ரெயிலின் வேகமும் குறைந்தது. இந்த விபத்து காரணமாக என்ஜினுடன் சேர்ந்த 4 பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ரெயிலும் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து என்ஜின் டிரைவர் உள்ளிட்டோர் இறங்கி வந்து பார்த்தபோது ரெயில் என்ஜினுக்குள் சிக்கிய நிலையில் 2 லாரி டயர்கள் கிடந்தன. அத்துடன் அவை என்ஜின் பகுதிக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வயர்களையும் கடுமையாக சேதப்படுத்தி இருந்தது. இதனால்தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. யாரோ மர்ம நபர்கள் சதிச்செயலில் ஈடுபடும் வகையில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்துவிட்டு சென்றுள்ளதும் தெரியவந்தது. இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நள்ளிரவில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் அச்சமடைந்த பயணிகள் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அதற்குள் தொழில்நுட்ப குழுவினர் ரெயில் நின்ற பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரெயில் பெட்டிகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை சீரமைத்தனர். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

மேலும் விபத்து நடந்த பகுதிக்கு ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாபரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த டயர்களை கைப்பற்றிய அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதற்கான பணிகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

ரெயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து சதிச்செயல் அரங்கேறியுள்ளது. இதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், கிராமத்தை சேர்ந்தவர்களா அல்லது வெளி நபர்களா என்பது உள்ளிட்ட கோணங்களில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story