கண்மாய் கரை உடைந்து வயலுக்குள் தண்ணீர் புகுந்தது
நரிக்குடி அருகே கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
விவசாய பணிகள் தீவிரம்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள தேளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது விவசாயிகள் வயலில் களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல் போன்ற பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இந்தநிலையில் வைகை அணையிலிருந்து நீர்வரத்து காரணமாக மிளகனூர் கண்மாய் நிரம்பிய நிலையில் தேளி கிராம கண்மாய்க்கு நீர்வரத்து வந்தது. ஓரிரு நாட்களிலேயே தேளி கண்மாய் நிரம்பியது.
கண்மாயில் உடைப்பு
இந்தநிலையில் கண்மாய் பகுதியின் மேற்பரப்பில் உடைப்பு ஏற்பட்டதால் கண்மாய் தண்ணீர் அனைத்தும் அருகே உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் தேளி கிராமத்தில் விவசாயம் செய்துள்ள 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கண்மாய் நீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். தற்போது கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வயலுக்குள் தண்ணீர் புகுந்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. எனவே பாதிக்கப்பட்ட வயல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.