காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம்
காங்கயத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே இந்த அலுவலகத்திற்கு என ரூ.3 கோடிய 53 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
விழாவிற்கு காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்து வரவேற்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி., அ.கணேசமூர்த்தி, திருப்பூர் மாநகராட்சி 4 -ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கலந்து கொண்டவர்கள்
இதில் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஜீவிதா ஜவஹர், காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, பா.ராகவேந்திரன், வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் தி.மு.க நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் சி.கருணைபிரகாஷ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.