விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு
விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் வசித்து வந்தவர் செல்வம். விவசாயி. இவருக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக முன்பணம் பெற்றுள்ளார்.
இந்த நிலம் விற்பனை செய்வது தொடர்பாக செல்வத்துக்கும், ராஜ்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் நந்தம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து ராஜ்குமாரும் (வயது 42), அவரது நண்பர்களான கோதண்டன் (28), சந்திரன் (23) ஆகியோரும் சேர்ந்து மனைவி கண் முன்பாகவே செல்வத்தை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சீபுரம் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு சார்பில் வக்கீல் சத்தியமூர்த்தி ஆஜரானார். வழக்கை விசாரித்த விரைவு கோர்ட்டு நீதிபதி இளங்கோவன் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.