காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) கருடசேவை திருவிழாவும்.6-ந்தேதி தேரோட்டமும், 8-ந்தேதி தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், (சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து). இந்து சமய அறநிலைத்துறை, கோவில் நிர்வாகிகள், மாநகராட்சி, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துறை. பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணி
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் பேசியதாவது:-
கருடசேவை மற்றும் திருத்தேர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்வயர்களில் மின்விபத்து ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்தல், மின்கசிவு ஏற்படாத வண்ணம் பாதுகாத்தல் மற்றும் தேருக்கு இடையூறாக உள்ள மின்சார வயர்களை முறைப்படுத்தவேண்டும்.
திருவிழாவின் பாதுகாப்புக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாச வேலைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
உணவு பாதுகாப்புத்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையிடம் அனுமதிபெற்ற பின்னரே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மேற்படி அன்னதானம் வழங்கும் இடங்களில் மட்டுமே அன்னதானம் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
திருவிழா காலங்களில் கோவிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாமிஊர்வலம் செல்லும் பாதைகளை தூய்மையாக வைத்து கொள்ளும் பொருட்டு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை பயன்படுத்த பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
திருவிழா காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்றுவழித்தடங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
திருவிழா நல்ல முறையில் நடைபெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டு்கொண்டுள்ளார்.