காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ விழா
புகழ்பெற்ற மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியுடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
பின்னர் சிறிய பல்லக்கு ஒன்றில் கொடிபட்டமும் வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இதையடுத்து கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்வு வாண வேடிக்கைகள், மேளதாளம் முழங்க நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு பிறகு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தேரோட்டம்
தினந்தோறும் காலையிலும், மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
வருகிற 27-ந்தேதி தங்க சிம்ம வாகனத்திலும், மார்ச் 3-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. வருகிற 5-ந்தேதி இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 8-ந்தேதி விடையாற்றி திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது
விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேச அய்யர், மணியக்காரர் சூரிய நாராயணன், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்து இருந்தனர்.