காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்
x

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

காஞ்சிபுரம்

தேரோட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக காஞ்சீபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று காலை வெகு சிறப்பாக நடந்தது. ஏலவார் குழலி அம்பாளுடன், ஏகாம்பரநாதர் சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில், மரத்தேரில் மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிறகு சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை இசைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நிலையில் இருந்து புறப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சென்னை ஐகோர்ட்டின் பணி ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேல்முருகன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வரதன், ஜெகநாதன், விஜயகுமார், வசந்தி சுகுமாரன், எம்.எல்.ஏக்கள் க.சுந்தர், சி.வி. எம். பி எழிலரசன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், அறநிலைய துறை இணை ஆணையர் வான்மதி, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, குமரகோட்டம் கோவில் செயல் அலுவலர் என். தியாகராஜன், முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார்,

ஆர்.சரவணன், ஆர்.கணேஷ், நகை கடை அதிபர் உதயா, பட்டு தொழில் அதிபர்கள் வி.சந்தானகிருஷ்ணன், சி.மோகன்ராஜ், ஓட்டல் அதிபர் டி.எம்.ரவி, தொழில் அதிபர் எஸ்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் மரத்தேர் நான்கு ராஜவீதிகளில் பவனி வந்தது. வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து கற்பூரம் தீபாராதனைகள் காண்பித்து பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story