கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை


கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை - காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
x

கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்ய முற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் பழுது பார்க்கவும் இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய விதிகளுக்கு முரணாக தனிநபரை நியமிப்பது சட்ட விரோதமானதும், தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

உத்தரவை மீறி சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தான் பொறுப்பாளர்கள். கழிவுநீர் தொட்டி கழிவுநீர் குழாயில் எந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். மனிதர்கள் மூலம் கழிவுநீர் குழாயில் அடைப்பை அகற்றுவது மற்றும் சுத்தம் செய்வதை கண்டறிந்தால் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணான 1800 425 2801 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் பணி தடை செய்யப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் மனிதக்கழிவை மனிதன் அகற்றும் தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 மற்றும் விதிகள் 2013 படியும் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் படியும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story