காமராஜர் பிறந்தநாள்விழா காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுக்கு நிதி உதவி
காமராஜர் பிறந்தநாள்விழா காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
பொன்னேரியில் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு பொன்னேரி தொகுதியில் அடங்கிய தச்சூர் கிராமத்தில் 60 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு அதில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது. இதனையடுத்து பொன்னேரி சட்ட மன்ற அலுவலகத்தில் எம்.எல்.ஏ.வை சந்திக்க வரும் பொதுமக்கள் நலனுக்காக புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு வந்திருந்தவர்களை பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிதம்பரம் முன்னிலை வகித்தார். பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் காமராஜரின் ஆட்சி முறை பற்றி பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசினார். இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு தலா 10 ஆயிரம் நிதி உதவி வழங்கியும் மாதம்தோறும் அவர்களுக்கு ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும் திருவள்ளூர் எம்.பி.யுமான டாக்டர் ஜெயக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சதாசிவலிங்கம், பொன்னேரி வட்டார தலைவர் ஜலந்தர், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார், சந்திரசேகர்நாயுடு, கோவிந்தராஜ், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மீஞ்சூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைவேல்பாண்டியன் நன்றி கூறினார்.