'கல்வித்துறையை உயர்த்திய பெருமை காமராஜர், கருணாநிதியை சேரும்'-அமைச்சர் ராஜகண்ணப்பன் புகழாரம்


கல்வித்துறையை உயர்த்திய பெருமை காமராஜர், கருணாநிதியை சேரும்-அமைச்சர் ராஜகண்ணப்பன் புகழாரம்
x

கல்வித்துறையை உயர்த்திய பெருமை காமராஜர்,கருணாநிதியை சேரும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் புகழாரம் சூட்டினார்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கல்வித்துறையை உயர்த்திய பெருமை காமராஜர்,கருணாநிதியை சேரும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் புகழாரம் சூட்டினார்.

வழிகாட்டும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழா கீழக்கரை முகமது சதக் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. விழாவை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து வரவேற்றார்.

பள்ளிக்கல்வி துறை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் உயர்கல்விக்கான வழிகாட்டி கையேடுகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டார். பல்வேறு பாடப்பிரிவுகள் தொடர்பான கண்காட்சி அரங்குகளை அமைச்சர் திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காமராஜரை சேரும்

ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டமல்ல. வளர்ந்து வரும் மாவட்டம். பள்ளிக்கல்வியை உயர்த்திய பெருமை காமராஜருக்கும், உயர் கல்வியை உயர்த்திய பெருமை கருணாநிதியையுமே சாரும். இந்தியாவில் உயர் கல்வி கற்பதில் தமிழகம் 30 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தொழில்துறையில் 14-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3 இடத்திற்கு முன்னேறி உள்ளது. உயர்கல்வி கற்பதில் பெற்றோர் தங்களின் கருத்தை பிள்ளைகளிடம் திணிக்கக்கூடாது.

பொறியியல், மருத்துவம் மட்டும் படிப்பல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதேனும் ஒரு பாடத்தை கற்பதே கல்வியாகும். எந்த துறையானாலும் போராடி வெல்ல வேண்டும்.மக்களின் அடிப்படை வசதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதால் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இவ்விழாவில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், நவாஸ்கனி எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் புல்லாணி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, கல்வி மாவட்ட அலுவலர்கள் முருகம்மாள், சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story