கல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
கச்சிராயப்பாளையம் அருகே கல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கச்சிராயப்பாளையம்
சின்னசேலத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் அரசு பஸ் கச்சிராயப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் சின்னசேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 50 பயணிகள் பயணம் செய்தனர். கடத்தூர் அருகே வந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் அரசு பஸ்சை நிறுத்துவதற்காக கையை நீட்டி சைகை காட்டினர். ஆனால் பஸ் அங்கு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபா்கள் சிலர் பஸ் மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.