கல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
உளுந்தூர்பேட்டை அருகே கல்வீசி அரசு பஸ் கண்ணாடி உடைப்பு நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவர்கள் ஆத்திரம்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் அதிக அளவில் பயணிகள் இருந்ததால் கூட்ட நெரிசல் காரணமாக ஒளையனூர் எம்.எஸ்.தக்கா பஸ் நிறுத்தம் பகுதி அருகே பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் சிலர் கல்வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதை அடுத்து டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கல்வீசி கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி அவர்களை எச்சரித்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த அரசு பஸ் அங்கிருந்து உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்டு சென்றது. பள்ளி மாணவர்கள் கல்வீசி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.