தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கல்பாக்கம் வீரர்கள் 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை
தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கல்பாக்கம் வீரர்கள் 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
டெல்லியில் தேசிய அளவிலான 7 விதமான சிலம்பக்கலை போட்டிகள் நடந்தது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஹரியானா, பஞ்சாப், புதுடெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிலம்பக்கலை வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை சேர்ந்த சிலம்பக்கலை வீரர்கள் 25 பேர் தலைமை பயிற்சியாளர் சத்யராஜ், கல்பாக்கம் பகுதி பயிற்சியாளர் ஓவியா தலைமையில் இப்போட்டியில் பங்கேற்றனர்.
3 பிரிவாக நடத்தப்பட்ட நெடுங்கம்பு வீச்சு, அலங்கார சுற்று, நேரடி சண்டை, வாள் வீச்சு, மான்கொம்பு, வேல் கம்பு, சுருள் வாள் வீச்சு ஆகிய 7 விதமான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்ற கல்பாக்கம் சிலம்பக்கலை வீரர்கள் பிரபு, இனியராஜ், கார்த்திக்பெருமாள், கணேசன், டெல்லிகுமார், மதன்குமார் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். அதேபோல் மற்ற வீரர்கள் 4 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கம் வென்றனர்.