கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியத்தில் மிகவும் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கொடியேற்றத்துடன் தேர்திருவிழா நடைபெறும். இக்கோவிலில் கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. தினமும் இரவு நேரங்களில் பல்வேறு வகையான வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
திருவிழாவின் 9 வது நாளான இன்று உற்சவமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து மண்டகப்படி பூஜை செய்து அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்தனர். அதன் பின்னர் 3.45 மணி அளவில் திருத்தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பியவாறு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேர் நான்கு மாட வீதிகளின் வழியே பயணித்து மாலை 5.45 மணியளவில் நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அலுவலர்கள் பெரியபால மூப்பர் வகையறாவினர், ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். திருக்கோவிலூர் டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.