கள்ளக்குறிச்சியில் இருந்து பெரியநெசலூருக்கு மாணவி ஸ்ரீமதி உடல் இன்று எடுத்து செல்லப்படுகிறது 40 கி.மீ. தூரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
கள்ளக்குறிச்சியில் இருந்து பெரியநெசலூருக்கு மாணவி ஸ்ரீமதி உடல் இன்று எடுத்து செல்லப்படுகிறது. எனவே 40 கி.மீ. தூரத்துக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டாலும் மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மாணவியின் பெற்றோர், உறவினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே கள்ளக் குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த மாணவியின் உடல் கடந்த 14-ந் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 19-ந்தேதி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மறுபிரேத பரிசோதனை நடந்த போது, மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வரவில்லை. இதற்கிடையே மறுபிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை பெற்று செல்லுமாறு கூறி, வருவாய்த்துறையினர் மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் நோட்டீசு ஒன்றையும் ஒட்டினர். இருந்த போதிலும் நேற்று வரைக்கும் மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் முன்வரவில்லை.
உடலை வாங்க சம்மதம்
இதனிடையே மறு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க உத்தரவிட கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதன் மீது நேற்று நடந்த விசாரணையின் போது மாணவியின் உடலை நாளை(அதாவது இன்று) காலை பெற்றுக்கொள்வதாக அவரது பெற்றோர் தரப்பினர் சம்மதம் தெரிவித்தனர். எனவே ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வர உள்ளதால், அந்த பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வழியெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு
மருத்துவமனையின் முன்பு கலவர தடுப்பு வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெற்றோர் மூலம் பெறப்பட உள்ள மாணவியின் உடலானது அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் இருந்து நீலமங்கலம், முடியனூர், விருகாவூர் வழியாக பெரியநெசலூர் கிராமத்திற்கு செல்ல சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அந்த சாலையில் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் செல்லும் சாலையை போலீசார் தங்களது கட்டுப்பாடிற்குள் கொண்டு வந்து, பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.