கள்ளக்குறிச்சி சம்பவம்: மாணவிக்கு ரத்த இழப்பு; மனித உருவிலான பொம்மையை வைத்து ஆய்வு


கள்ளக்குறிச்சி சம்பவம்:  மாணவிக்கு ரத்த இழப்பு; மனித உருவிலான பொம்மையை வைத்து ஆய்வு
x

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தில் மாணவிக்கு ரத்த இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல் கட்ட பிரேத பரிசோதனை முடிவு தெரிவிக்கிறது.



கள்ளக்குறிச்சி,



கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற 17 வயது மாணவி கடந்த 13ந்தேதி உயிரிழந்த நிலையில், இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. இதில் காவல்துறையினர் மீது போராட்டக்கார்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் காவல்துறையின் வாகனம் மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.

கள்ளக்குறிச்சி வன்முறையில் 37 பேருந்துகள் உட்பட 67 வாகனங்கள் தீக்கிரையாகின. சுமார் 3,500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 22 சிறார்கள் உள்ளிட்ட 306 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவி மரண வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

போராட்டகாரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி. கணேசன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கலவரத்தின்போது காயமடைந்த போலீசாரை மருத்துவமனையில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

சி.பி.சி.ஐ.டி. குழு, தடயவியல் குழுக்கள் மற்றும் பிற விசாரணை அமைப்புகளும் மாணவி மர்ம விவகாரம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிறுமி, பள்ளியின் 3வது தளத்தில் இருந்து விழுந்ததில் உயிரிழந்து உள்ளார் என்ற நிலையில், சி.பி.சி.ஐ.டி. குழுவை சேர்ந்த ஜியாவுல் ஹக் என்பவர் தலைமையிலான குழுவினர், மனித உருவம் கொண்ட பொம்மை ஒன்றை வைத்து சம்பவ பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தது பற்றிய ஆய்வை தொடங்கினர்.

இதற்காக அந்த பொம்மையை பல முறை உயர பகுதியில் வைத்து கீழே வீசியுள்ளனர். பல்வேறு கோணங்களில் இருந்து தூக்கி எறியப்பட்ட பொம்மைக்கு ஏற்படும் பாதிப்புகளை அளவிட்டனர். வேறு யாரேனும் தள்ளி விட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்? என கண்டறியும் முயற்சியிலும் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

முதல் கட்ட பிரேத பரிசோதனையில், சிறுமிக்கு ரத்த இழப்பு ஏற்பட்டு உள்ளது தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவிக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ள அனைத்து விவரங்களையும் சேகரிக்கும் முயற்சியில் விசாரணை குழு ஈடுபட்டு உள்ளது.

எனினும், மாணவி மரணம் அடைவதற்கு முன்பே காயங்கள் ஏற்பட்டு உள்ளது என்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். மாணவி தற்கொலை செய்யவில்லை என்றும் கூறி வருகின்றனர். இதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்றும் மாணவியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.


Next Story