கலாஷேத்ரா விவகாரம்: தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும் - மகளிர் ஆணைய தலைவர் பேட்டி
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்று மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.
சென்னை,
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி இன்று விசாரணை நடத்தினார்.
அதன்பின் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும். மாணவிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நான் நேரிலும் சந்திப்பேன். பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். புகார்கள் ஆன்லைன் மூலமும் வந்துள்ளன. புகார்கள் மற்றும் ஆய்வு அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்படும்.
ஆதாரத்தின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஐசிசி கமிட்டியின் ஆவணங்களை கேட்டுள்ளேன். கலாஷேத்ராவில் புகார் பிரிவு இயங்கியது குறித்து எந்த ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.