கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: சென்னை மாநகராட்சியில் 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு; 28-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு குடும்ப தலைவிகளுக்கான விண்ணப்பப்பதிவு சிறப்பு முகாம்களில், சென்னை மாநகராட்சியில் இதுவரை 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. வருகிற 28-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 வழங்க அரசு முடிவு செய்து அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம் தர்மபுரியில் அதற்கான விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அதனை பார்வையிட்டார்.
அதன் தொடர்ச்சியாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியில் 3 கட்டங்களாக இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 1,428 ரேஷன் கடைகளில் முதற்கட்டமாக 704 கடைகளில் கடந்த 24-ந்தேதி சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டன. இந்த முகாம் வருகிற 4-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதுவரை இந்த சிறப்பு முகாம்களில் 3 லட்சத்து 98 ஆயிரத்து 179 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மேலும், இதுவரை 6 லட்சத்து 6 ஆயிரத்து 467 விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக 2-வது கட்டமாக 724 ரேஷன் கடைகளில் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் நடக்க உள்ளது. அதன் பின்னர் விடுபட்டவர்களுக்கு 3-வது கட்டமாக வருகிற 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளில் 1,730 தன்னார்வலர்கள், 704 உதவி தன்னார்வலர்கள் மற்றும் 704 சிறப்பு முகாம் பொறுப்பு அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் துறை சார்பில் கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 1,515 போலீசார் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதுதவிர 154 நகரும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.