கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: சென்னையில் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நேற்று முதல் தொடங்கின
சென்னையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நேற்று முதல் தொடங்கின. இந்த முகாம்கள் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள ஆயிரத்து 428 நியாயவிலைக் கடைகளில் முதல் கட்டமாக 704 நியாயவிலைக் கடைகளில், 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் ஆயிரத்து 730 சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றன. மேலும் முதல் கட்ட முகாமிற்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று 6 லட்சத்து 28 ஆயிரத்து 874 விண்ணப்பங்கள் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டன. முதல்கட்ட சிறப்பு முகாம்களின் மூலமாக கடந்த 3-ந்தேதி வரை 4 லட்சத்து 70 ஆயிரத்து 301 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தம் உள்ள ஆயிரத்து 428 நியாயவிலைக் கடைகளில் முதல் கட்டத்தில் நடைபெற்ற 704 நியாயவிலைக் கடைகள் போக, மீதமுள்ள 724 நியாயவிலைக் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒருதன்னார்வலர் என்ற கணக்கில் ஆயிரத்து 781 சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம்கள் நேற்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை 2-ம் கட்டமாக நடைபெற உள்ளன.
மேலும், காவல்துறை சார்பில் அதிகளவில் காவலர்கள் ஈடுபடுத்தப்படவும், நகரும் குழுக்கள் அமைப்பப்பட்டும் விண்ணப்ப முகாம்களில் கூட்ட நெரிசல் ஏற்படாவண்ணம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி 2-ம் சிறப்பு முகாம்களுக்கான பகுதிகளில் விண்ணப்பம் மற்றும் டோக்கன் கடந்த 1-ந்தேதி முதல் வீடுவீடாக சென்று குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வரவேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.
விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்பபதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்பட்டுள்ளன.
அண்ணா நகர் மண்டலம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விண்ணப்பப்பதிவு முகாம் உள்ளிட்ட விண்ணப்பப்பதிவு முகாம்களை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அவருடன் அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகன் மற்றும் அரசு உயர் அதிகரிகள் உடன் இருந்தனர்.