நீதிபதிகள், டாக்டர்கள், போலீசார் யோகா பயிற்சி
சா்வதேச யோகா தினத்தையொட்டி திருச்சியில் நீதிபதிகள், டாக்டர்கள், போலீசார் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
சர்வதேச யோகா தினம்
9-வது சர்வதேச யோகா தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு தலைமையில் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட நீதிபதிகள், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு, சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனம், சூரிய நமஸ்காரம், மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர்.
இதேபோல் துறையூர் நீதிமன்ற வளாகத்தில் யோகா ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி ஜெய்சங்கர், மாவட்ட உரிமைகள் நீதிபதி சத்தியமூர்த்தி, குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி நர்மதா ராணி, வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லால்குடி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான விஜயகுமார் யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜ்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அபிநயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் யோகா பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். லால்குடி வக்கீல்கள் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
சித்த மருத்துவமனை
திருச்சி மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்தார். இதையொட்டி நடைபெற்ற இயற்கை மற்றும் யோகா மருத்துவ கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் இந்திரா கணேசன் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மாணவர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
திருச்சி மாநகர காவல் துறை, அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவர்கள் இணைந்து கே.கே. நகர் ஆயுதப்படை மைதானத்தில் சர்வதேச யோகா தின விழாவை கொண்டாடினர். மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார், மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி காமராஜ் தலைமையில் இயற்கை யோகா டாக்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களையும், மூச்சுபயிற்சிகளையும் மேற்கொண்டனர்.
ரெயில்வே பாதுகாப்பு படை
திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் திருச்சி ரெயில்மஹால் மற்றும் ரெயில் கல்யாண மண்டபம், பொன்மலை டீசல்ஷெட் ஆகிய இடங்களில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் தலைமையில், கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் முன்னிலையில் திரளான ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி, ரெயில்வே பாதுகாப்பு படையினர் யோகாசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு திருச்சி முதுநிலை கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் உயர் அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டு யோகாசன பயிற்சி மேற்கொண்டனர். இதேபோல் திருச்சியில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி. ஆணையரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆணையர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலும், இணை ஆணையர் ரத்னகுமார் மாத்தூர் முன்னிலையிலும் ஊழியர்கள் யோகாசனம் செய்தனர்.
பெரியார் மருந்தியல் கல்லூரி
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் செந்தாமரை தலைமை தாங்கி பேசினார். பேராசிரியர் இஸ்மாயில் மற்றும் முன்னாள் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். சர்வதேச யோகா நாளின் சிறப்பு விருந்தினர் யோகா ஆசிரியர் கவிஞர் சின்னையன் யோகா குறித்த நலவாழ்வு தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். மற்றும் மாணவர்களின் உடல், மனம் சார்ந்த திறன்களை மேம்படுத்தும் யோகா பயிற்சியினை செய்து காட்டினார். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெசிமா பேகம் வரவேற்றார். முடிவில் மூலிகை மருந்தியல் துறை பேராசிரியர் கவிதா நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மருந்தியல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.