'மருத்துவமனையிலேயே செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்' - தி.மு.க. வழக்கறிஞர் சரவணன்


மருத்துவமனையிலேயே செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார் - தி.மு.க. வழக்கறிஞர் சரவணன்
x
தினத்தந்தி 16 Jun 2023 2:05 PM GMT (Updated: 16 Jun 2023 2:07 PM GMT)

செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனை சிகிச்சையை தொடரலாம் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட்டு நேற்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாணை 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவு சார்பில் செந்தில் பாலாஜிக்கு 15 நாட்கள் காவல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.

இந்த விசாரணையின் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறையின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அல்லி பிறப்பித்த உத்தரவில், செந்தில் பாலாஜிக்கு வரும் 23-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவல் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "வழக்கு விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி தனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். எனவே செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்படும் என நீதிபதியிடம் தெரிவித்தோம். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனை சிகிச்சையை தொடரலாம் என்றும், மருத்துவமனையிலேயே அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்" என்று தெரிவித்தார்.



Next Story