கரடு, முரடான பாதையில் பயணம்: அடிப்படை வசதிக்காக ஏங்கும் மலைக்கிராம மக்கள்


பெரும்பாறை அருகே அடிப்படை வசதிக்காக மலைக்கிராம மக்கள் ஏங்கி தவிக்கின்றனர். கரடு, முரடான பாதையில் அவர்கள் பயணிக்கின்றனர். நோயாளிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலநிலை நீடிக்கிறது.

திண்டுக்கல்

மலைக்கிராம மக்களின் ஏக்கம்

மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலம் என்றாலே இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் அங்கு வசிக்கிற மக்கள் தான், அடிப்படை வசதிக்காக ஏங்கி தவிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

அந்த வரிசையில், தாண்டிக்குடி ஊராட்சி பெரும்பாறை அருகே கூடம்நகர் மலைக்கிராமமும் இடம் பிடித்துள்ளது. இங்கு 65 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.

காபி, அவரை, பீன்ஸ், சவ்சவ் சாகுபடி செய்து வருகின்றனர். திரும்பி பார்க்கும் திசையில் எல்லாம் பசுமையாக காட்சி அளிக்கும் இந்த கிராமத்தில் வசிக்கிற மக்களின் வாழ்க்கையில், எந்த வசதிகளும் இன்றி வறட்சி தாண்டவம் ஆடுகிறது.

அதாவது அந்த கிராம மக்களுக்கு, அடிப்படை வசதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இங்கு வசிக்கிற மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 30 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த வீடுகளின் மேற்கூரை கான்கிரீட்டால் அமைக்கப்படவில்லை. தகர சீட்டுகளால் வேயப்பட்டதாகும்.

பறந்து செல்லும் மேற்கூரை

பலத்த காற்று வீசும்போது வீட்டின் மேற்கூரை பல மீட்டர் தூரம் பறந்து சென்று விடுகிறது. அதன்பிறகு தகரத்தை தேடி பிடித்து மீண்டும் மேற்கூரை அமைத்து வருகின்றனர். ஒரு சிலர், வீட்டின் மேற்கூரை பறக்காமல் இருப்பதற்கு அதன் மீது கற்களை அடுக்கி வைத்திருக்கும் காட்சியையும் அங்கு பார்க்கலாம்.

மேற்கூரை சேதமடைந்து, சுவர் இடிந்த நிலையில் உள்ள சில வீடுகளில் மலைக்கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதாரம் என்பது அங்கு சுத்தமாக கிடையாது. கழிவுநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நின்று சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மலைக்கிராம மக்களுக்கு கழிப்பறை, மயானம் வசதி எதுவும் கிடையாது என்பது கூடுதல் வேதனை.

மின்சார வசதி அங்கு உள்ளது. ஆனால் அந்த கிராமத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. பழுதடைந்து பல மாதங்கள் உருண்டோடி விட்டது. இருப்பினும் தெருவிளக்குகள் பொருத்த யாரும் முன்வரவில்லை.

டோலி கட்டி...

இன்றைய நவீன காலத்திலும் மலைக்கிராம மக்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை. அந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது. இதனால் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டால், சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாண்டிக்குடி தான் மலைக்கிராம மக்கள் செல்கின்றனர்.

அதுவும் நோயாளிகளை உடனடியாக அழைத்து செல்ல முடியாது. ஏனெனில் போதிய சாலை வசதி கிடையாது. புதர் மண்டி போய் கரடு, முரடாக காட்சி அளிக்கும் ஒத்தையடி பாதை வழியாகவே பல காலமாக மலைக்கிராம மக்கள் தங்களது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த பாதை வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாது.

இதனால் டோலி கட்டி நோயாளிகளை தூக்கி செல்லும் அவலநிலை நீடித்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை கிடைக்காததால், மலைக்கிராம மக்கள் பாதி வழியிலேயே உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாகன இரைச்சல் இல்லாத கிராமம்

ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் கூட, மலைக்கிராம மக்கள் தாண்டிக்குடிக்கு நடந்து தான் வர வேண்டியுள்ளது. பொருட்களை வாங்கி கொண்டு தலையில் சுமந்து செல்லும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை வசதி இல்லாததால் இந்த கிராமத்துக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் அந்த கிராமத்தில் வாகன இரைச்சலை கேட்பது அரிதாகி விட்டது.

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய கொண்டு வருவதற்கு சிரமம் அடைந்து வருகின்றனர்.

திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுப்பு

அடிப்படை வசதி எதுவும் இல்லாததால், இங்கு வசிப்பவர்களுக்கு திருமணத்துக்கு பெண் கொடுக்க யாரும் முன்வருவதில்லை என்பது மலைக்கிராம மக்களின் ஆதங்கமாக எதிரொலிக்கிறது. இதனால் திருமண வயதை எட்டிய இளைஞர்கள் பலர் திருமணத்துக்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். அந்த கிராமத்தில் இருந்து வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தால் பெண் கொடுக்க தயாராக இருப்பதாக கூறுவதால் மலைக்கிராம மக்கள் மனதளவில் குமுறுகின்றனர்.

எனவே சாலை, சாக்கடை, கழிப்பறை, மருத்துவம், தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.


Next Story