சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம்


சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம்
x

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் 4-வது கூட்டம் நடந்தது. இதில், பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி கோரிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

சென்னை,

பத்திரிகையாளர் நல வாரியத்தின் 4-வது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், கூடுதல் இயக்குனர் (செய்தி) சிவ.சு.சரவணன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களான 'தினத்தந்தி' குழுமத்தின் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிறப்பு செய்தியாளர் எம்.ரமேஷ், அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. மேலும், பத்திரிகையாளர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர் அட்டைகள், வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குவது குறித்தும் மற்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முன்கள பணியாளர்கள்

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்ததோடு அவர்களுக்கான நலத்திட்டங்கள் விரைவாக போய்ச் சேர வேண்டும் என அக்கறையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

பொதுவாக அனைத்திலும் அவர் வேகமாக இருக்கிறார். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருக்கின்ற பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதிலும் அக்கறையோடு இருக்கிறார்.

அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பத்திரிகையாளர் நல வாரியம் தொடங்கப்பட்ட இந்த ஓராண்டில் 4 முறை ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, அதிலே பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு கடைக்கோடி பத்திரிகையாளர் குடும்பத்திற்கு உதவிகள் போய் சேர்வது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது' என்றார்.

ரூ.5 லட்சம் குடும்ப உதவி நிதி

முன்னதாக பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ், பணிக்காலத்தில் மரணமடைந்த பத்திரிகையாளர் ஒருவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.


Next Story