தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக, வேளாண்மை இணைஇயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.


தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக, வேளாண்மை இணைஇயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக, வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உரம் இருப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தார், புதூர் ஆகிய வட்டாரங்களில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மானாவாரி பயிர் சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, மாவட்டத்தில் 3 ஆயிரத்து 100 மெட்ரிக் டன் டி.ஏ.பி. 2 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள், அடி உரத்தேவைக்காக கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் இந்த உரங்களை வாங்கி அடியுரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவசாயிகள் உரமூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை வாங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் உரம் வாங்க செல்லும்போது தங்களின் ஆதார் அட்டையை கண்டிப்பாக உடன் எடுத்து சென்று விற்பனை முனையக் கருவியில் பில் போட்டு அந்த பில்லில் உள்ள தொகையை மட்டும் செலுத்தி உரம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்த வேண்டாம்

வெளி மாவட்டங்களைச் சார்ந்த வியாபாரிகள் சாகுபடி தருணத்தை பயன்படுத்தி ஆர்கானிக் உரங்கள் என்ற பெயரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களின் தோட்டங்களுக்கே கொண்டு சென்று உரங்களை விற்க வாய்ப்பு உள்ளது. மேற்படி, உரங்களில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவு தெரியாத நிலையில் விவசாயிகள் அதனை வாங்கி பயன்படுத்த வேண்டாம். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்கானிக் உரங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடையே விற்பனை செய்ய வரும் வியாபாரிகள் குறித்து விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது தூத்துக்குடி வேளாண்மை உதவி இயக்குநருக்கு (தரக்கட்டுப்பாடு) 0461-2340678, 9655429829 ஆகிய எண்ணிகளிலோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story