வேலை வாய்ப்பு முகாம்: 613 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்


வேலை வாய்ப்பு முகாம்: 613 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Aug 2023 12:30 AM IST (Updated: 13 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 613 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

சிவகங்கை


சிவகங்கையில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 613 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை சிவகங்கையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடத்தின. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் வானதி வரவேற்று பேசினார்.

விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசியதாவது:-

பணி ஆணை

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே அதிகமான வளர்ச்சியை பெற்றது தமிழகம்தான். இதற்கு காரணம் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி. அவருடைய முயற்சியால்தான் சாதாரண வீட்டு பிள்ளைகளும் படித்து உயர முடியும் என்ற நிலை உருவானது. பள்ளி படிப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை இலவச கல்வியை பெறுவதற்கு கருணாநிதி காரணமாக இருந்தார்.

சிவகங்கையில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 2,356 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 613 பேர் வேலைக்கான பணி நியமண ஆணையை பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவியை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து, மகளிர் கல்லூரி முதல்வர் இந்திரா, வேலைவாய்ப்பு அலுவலர் (பயிற்சி) ராஜலக்ஷ்மி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் நன்றி கூறினார்

தேர்தல் ஆணையம்

பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவிகாலம் 5 ஆண்டு. கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிகாலம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு செயல் அலுவலர்கள் அதன் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர். திட்டமிட்டபடி அதற்கான தேர்தல் நடைபெறும் என்றும் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த ஆணையம் இருப்பதுபோல் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த ஆணையமானது கடந்த 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story