ஆயுதத்தை காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை, செல்போன் பறிப்பு


ஆயுதத்தை காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை, செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:46 PM GMT)

ஆயுதத்தை காட்டி மிரட்டி தம்பதியிடம் நகை, செல்போன் பறிக்கப்பட்டது.

சிவகங்கை

திருப்புவனம்,

மதுரை மாவட்டம் ஆனையூர் அருகே உள்ள கலைநகர் பகுதியை சேர்ந்தவர் கவுசிக்(வயது 31). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (31). கணவன், மனைவி இருவரும் தங்கள் புதிய காரில் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தி வரை சென்றனர். பின்பு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். கீழடி விலக்கு அருகே, காரை ஓரமாக நான்கு வழிச்சாலையில் நிறுத்திவிட்டு இருவரும் கீழே இறங்கி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென கையில் வைத்திருந்த வாளை காட்டி மிரட்டி, ராஜேஸ்வரி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்தனர். மேலும் கவுசிக்கை மிரட்டி செல்போன், கார் சாவியை வாங்கினர். பின்னர் மோட்டார்சைக்கிளில் 2 பேர் தப்பி சென்றனர். மற்றொரு நபர் புதிய காரை எடுத்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் ஒரு தனிப்படையும், திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் ஒரு தனிப்படையும், மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பில் ஒரு தனிப்படையும் என 3 தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story