அடையாறில் டாக்டர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை; தப்பி ஓடிய உறவுக்கார ஆசாமிக்கு வலைவீச்சு


அடையாறில் டாக்டர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை; தப்பி ஓடிய உறவுக்கார ஆசாமிக்கு வலைவீச்சு
x

சென்னை அடையாறில் ஓய்வுபெற்ற அரசு டாக்டர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகளையும், ரூ.3 லட்சத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிய உறவுக்கார ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை

ஓய்வுபெற்ற அரசு டாக்டர்

சென்னை அடையாறு, இந்திராநகர், 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 76). இவர், சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி ஓய்வுபெற்று விட்டார். இவருடைய மனைவி ஞானமணி (72). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தங்களை வீட்டில் நல்லபடியாக பார்த்துக்கொள்வதற்காக, கடலூரைச் சேர்ந்த தனது தூரத்து உறவினர் கனக சண்முகம் என்பவரை டாக்டர் கனகராஜ் வேலைக்கு அமர்த்தினார்.இதற்காக கனகசண்முகத்துக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டது. நல்லபடியாக டாக்டர் கனகராஜூக்கு வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் திடீர் புயல் வீசியதுபோல, டாக்டர் கனகராஜ் நோய்வாய்ப்பட்டார். அவர் இறந்தும் போனார்.

தனியாக இருந்த ஞானமணி

டாக்டர் இறந்து போனதால் அவருடைய மனைவி ஞானமணி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட கனகசண்முகம்தான், ஞானமணியை கவனித்து வந்தார். அவரது நடவடிக்கைகள் சரி இல்லை. திடீரென்று கனக சண்முகம் வேலையில் இருந்து நின்று விட்டார். இதனால் சந்தேகப்பட்ட ஞானமணி, வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

100 பவுன் நகைகள் கொள்ளை

பீரோவில் இருந்த சுமார் 100 பவுனுக்கு மேல் தங்க நகைகள், ரூ.3 லட்சம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. டாக்டர் கனராஜ் ஓய்வுபெற்றது சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜூகளும் அதில் இருந்தன. வேலையை விட்டு நின்ற, கனகசண்முகம் மீது சந்தேகப்பட்டு, ஞானமணி அவரிடம் போனில் பேசி இதுகுறித்து கேட்டார். அப்போது கனகசண்முகம் திமிராக பேசினார். நகை-பணத்தை கொள்ளையடித்தது நான்தான், உங்களால் என்ன செய்யமுடியும். உங்களுக்கு யார்? இருக்கிறார்கள். அனாதையான உங்களை உயிரோடு விட்டு வந்ததே தப்பு. பணம்-நகையைப்பற்றி போலீசில் புகார் கொடுத்தால், உங்களை போட்டு தள்ளி விடுவேன் என்றும் கனகசண்முகம் மிரட்டல் விடுத்தார். நகை-பணத்தை எடுத்துக்கொள், நீ எடுத்து சென்ற சில தஸ்தாவேஜூகளை திருப்பிக்கொடுத்து விடு, என்றும் ஞானமணி கெஞ்சிக்கேட்டுப்பார்த்தார். ஆனால் எதையும் திருப்பிக்கொடுக்க கனகசண்முகம் மறுத்து விட்டார்.

போலீசில் புகார்

இதனால் வேறு வழி இல்லாமல், ஞானமணி அடையாறு போலீசில் இது குறித்து புகார் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவு அடிப்படையில், கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த்சின்கா, இணை கமிஷனர் சிபிசக்ரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், நகை-பணம் மற்றும் தஸ்தாவேஜூகளை கொள்ளை அடித்த கனகசண்முகத்தை கைது செய்ய, கடலூருக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

உறவினர் என்று வேலைக்கு அமர்த்தினால், உயிரை வாங்குவேன் என்று மிரட்டல் விடுத்து, நகை-பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற கனகசண்முகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஞானமணி தெரிவித்தார். வேலியே பயிரை மேய்ந்தது போன்ற இந்த சம்பவம், அடையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story