திருவள்ளூர் அருகே 2 திருமண மண்டபங்களில் உறவுக்கார பெண் போல நடித்து 26 பவுன் நகை திருட்டு
திருவள்ளூர் அருகே 2 திருமண மண்டபங்களில் உறவுக்கார பெண் போல நடித்து 26 பவுன் நகை திருடப்பட்டது.
நகை திருட்டு
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 56). விவசாயி. நேற்று முன்தினம் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமணம் நடந்து கொண்டிருந்தது. முகூர்த்த நேரத்தில் உறவுக்கார பெண் என்று கூறி மணமகள் அறைக்கு சென்ற பெண் ஒருவர் மணமகள் அணிந்து கழற்றி வைத்திருந்த 20 பவுன் தங்க நகையை எடுத்து சென்று விட்டார். இதுகுறித்து சத்தியமூர்த்தி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதே போல திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (59). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மணவாளநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகன் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது உறவுக்கார பெண் என்று கூறி மணமகள் அறைக்கு சென்ற பெண் ஒருவர் நன்கு பழகினார். சிறிது நேரத்தில் அந்த பெண் மணமகள் அணிந்து கழற்றி வைத்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை எடுத்து கொண்டு தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.