பெண் போலீசின் கண்முன் கணவரை வெட்டி நகை-பணம் கொள்ளை


பெண் போலீசின் கண்முன் கணவரை வெட்டி நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெண் போலீசின் கண்முன் கணவரை வெட்டி நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை


சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெண் போலீசின் கண்முன் கணவரை வெட்டி நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

வழிமறித்து செல்போன் பறிப்பு

மதுரை மாவட்டம் வரிச்சூரை சேர்ந்தவர் செக்கடியான் (வயது 38). இவர் சிவகங்கையை அடுத்த சாமியார்பட்டி என்ற கிராமத்திற்கு கண்மாய் மீன் வாங்க சென்றார். அவர் சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பில்லூர் அருகே சென்ற போது 3 பேர் அவரை வழிமறித்து வாளால் வெட்டி ரூ.2 ஆயிரம், செல்ேபானை பறித்தனர்.

அப்போது அந்த வழியில் சிவகங்கை மாவட்டம் மழவராய நேந்தலைச் சேர்ந்த மோகனசுந்தரேஸ்வரன் (35) என்பவர் தனது மனைவி புவனேஸ்வரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். புவனேஸ்வரி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.

போலீஸ் கணவருக்கு வெட்டு

இந்த சம்பவத்தை பார்த்த மோகன சுந்தரேஸ்வரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவர்களை பிடிக்க முயன்றார். உடனே அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் நல்லாகுளம் என்ற இடம் அருகே மோகனசுந்தரேஸ்வரனை வழிமறித்தனர். திடீரென்று 3 பேரும் ஆயுதங்களால் வழிமறித்ததால் அவர்கள் திகைத்தனர். அப்போது பெண் போலீசின் கண் முன்னே அவரது கணவரை வாளால் வெட்டி அவரிடம் இருந்த 1¼ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவைகளை பறித்து சென்றனர்.

விபத்தில் சிக்கிய சட்டக்கல்லூரி மாணவர்

பின்னர் அந்த 3 பேரும் சித்தாலங்குடி அய்யனார் கோவில் அருகே சென்ற போது எதிரே சிவகங்கையை சேர்ந்த அரவிந்த் (23) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை 3 பேரும் வழிமறித்து வாளால் வெட்ட முயன்றனர். இதை பார்த்த அரவிந்த் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு வந்த வழியே சென்றார். அவரை 3 பேரும் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர்.

இந்த நிலையில் அரவிந்த் அந்தப் பகுதியில் ரோடு ஓரத்தில் இருந்த ஓட்டலில் வாகனத்தை நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த விளம்பரப் பலகையில் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்து காயமடைந்தார்.

போலீசில் புகார்

அவரை பின்தொடர்ந்து சென்ற 3 பேர்களும் அங்கு ஆட்கள் அதிகமாக இருப்பதை பார்த்தவுடன் பூவந்தி பகுதியை நோக்கி தப்பி சென்றனர். இதில் காயமடைந்த அரவிந்த் சிவகங்கை அருகே உள்ள சட்ட கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ஒரே நாள் இரவில் ஒரே ரோட்டில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை வாளால் வெட்டி நகை-செல்போன் கொள்ளை அடித்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 18 வயது முதல் 22 வயதுக்குள் இருக்கும். அதில் 2 பேர் வாள் வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை தாலுகா மற்றும் பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற 3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

ரோந்தை தீவிரப்படுத்த கோரிக்கை

சிவகங்கை பகுதியில் போதை பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் குற்றச்செயல்களில் சிறுவர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இருசக்கர வாகனங்களை திருடுவது, நகை-பணம் ஆகியவைகளை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் இருசக்கர வாகனங்களில் செல்லும் சிறுவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா? என்பதை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story